மொட்டு கட்சி-மஹிந்த தரப்பு ஆட்சியைப் பிடிப்பதற்கு கையில் எடுத்த ஆயுதம் இனவாதம்தான்.இதைத் தவிர வேறெந்த துருப்புச் சீட்டும் இருக்கவில்லை அவர்களின் கையில்.
சிங்கள மக்கள் மடையர்களாக இருக்கும்வரை இந்த இனவாதத்தை வைத்து அரசியலை ஓட்டலாம் என்பது அவர்களின் கணிப்பு.
இதற்கென அவர்கள் பலரைத் தெரிவு செய்து வைத்தனர்.ஞானசார தேரர்-அத்துரலிய ரத்தின தேரர்-சரத் வீரசேகர எம்பி-விமல் வீரவன்ச எம்பி உள்ளிட்ட பலர் அதற்குள் அடங்குவர்.
முஸ்லிம்களே அவர்களின் இலக்கு.இஸ்லாமிய பயங்கரவாதம் என்றொரு பதத்தை உருவாக்கி அதைத் தலைப்பாகக் கொண்டு நாடு பூராகவும் பிரசாரம் செய்தனர்-இனவாதத்தைக் கக்கினர்.
மலட்டுத் தன்மையை உருவாக்கும் மாத்திரைகள்;மலட்டுத்தன்மையை உருவாக்கும் கொத்து ரொட்டி-மலட்டுத் தன்மையை உருவாக்கும் ப்ரா என்றெல்லாம் புதுப்புது கதையை உருவாக்கி இருந்தார்கள்.
அம்பாறையில் உள்ள முஸ்லிம் ஹோட்டல் ஒன்றில் கொத்து ரொட்டிக்குள் மலட்டுத்தன்மையை உண்டு பண்ணும் மாத்திரைகள் கலக்கப்பட்டன என்று கதையைக் கட்டி அந்த ஹோட்டலைத் தாக்கினார்கள்.அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கினார்கள்.
இத்தனைக்கும் பின்னணியில் நின்று செயற்பட்டவர் சரத் வீரசேகர என்பது அம்பாறை மாவட்ட மக்கள் அனைவர்க்கும் தெரியும்.
மேலும் மதரஸாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுகிறது என்று அதற்கு எதிராகப் பிரசாரம் செய்தவரும் இவர்தான்.
இவர்கள் எல்லோரும் சேர்ந்து செய்த அந்தப் பாவத்தின் காரணமாகத்தான் இரண்டு வருடங்களில் அவர்களது தலைவர் கோத்தா பதவியையும் விட்டு-நாட்டையும் விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது.
இன்று இவர்களுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற ஆதரவு வெறும் 10 வீதம்தான்.
இனவாதத்தை வைத்து-முஸ்லிம்களைத் தூற்றி எம்மை ஏமாற்றிவிட்டார்கள்;எம்மை ஏமாற்றி எமது வாக்குகளை அபகரித்துவிட்டார்கள்.இனி அப்படியானதொரு நிலைக்கு இடங்கொடுக்கக்கூடாது என்று சிங்கள மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்.
அன்று இனவாதத்தை ஊக்குவித்த ஊடகங்களை சிங்கள மக்கள் இன்று விமர்சிக்கிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க.. மொட்டுக் கட்சிக்குள் இன்னும் இனவாதத்தை வைத்து-அதை நம்பி அரசியல் பிழைப்பு நடத்துகின்ற சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவ்வாறானவர்களுள் இந்த சரத் வீரசேகரவும் ஒருவர்.இரத்தத்தில் இனவாதம் ஊறிப்போன அவர் நாடாளுமன்றில் ஆற்றிய அந்த உரையை நாம் கண்டோம்.
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு-அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என எல்லோரும் கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் சரத் வீரசேகரவோ அதை எதிர்த்துப் பேசுகிறார்.
அதனூடாக அவர் இனவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் விதைக்க முற்படுகிறார்.
சிங்கள மக்கள் இப்போது விழித்துக்கொண்டார்கள்.
ஆனால்,சரத் வீரசேகர போன்றவர்கள் இன்னும் உறக்கத்திலேயே உள்ளார்கள்.