நாட்டில் உக்கிரமடைந்து செல்லும் பொருளாதார நிலைமை காரணமாக மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.அவர்கள் ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு அஞ்சப் போவதில்லை என்று முஜிபுர் ரஹ்மான் எம்பி தெரிவித்துள்ளார்.
மக்கள் இனிப் போராட்டம் நடத்தினால் இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என்று ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முஜிபுர் ரஹ்மான் எம்பி இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்;
ஜனாதிபதி இப்போது நன்றாகக் குழம்பிப் போய் இருக்கிறார்.நாட்டின் நிலைமை மேலும் மேலும் மோசமடைந்துகொண்டு செல்கிறதே தவிர முன்னேற்றமடையவில்லை.
இதனால் மீண்டும் மக்கள் வீதிக்கு வருவார்கள்.இதை உணர்ந்ததால்தான் ஜனாதிபதி இந்த நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர்களை இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என்று கூறியுள்ளார்.
மக்கள் இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை.அவர்கள் மீண்டும் வீதிக்கு வருவார்கள்.
ஜனாதிபதி பிரதமராவதற்கு முன் நாடாளுமன்றில் ஆற்றிய உரைகளை கொஞ்சம் எடுத்துப் பாருங்கள்.மக்கள் போராட்டத்துக்கு நூறு வீத ஆதரவு தெரிவித்துப் பேசி இருந்தார்.நூறு வீத ஜனநாயகவாதியாகத் தன்னைக் காட்டி இருந்தார்.
போராட்டக்காரர்களின் குரலுக்கு காது கொடுக்க வேண்டும்.அவர்களின் போராட்டம் சரியானது என்றெல்லாம் கூறி இருந்தார்.
இன்று ஜனாதிபதியானதும் அப்படியே தலைகீழாக மாறிவிட்டார்.அவர் செயற்படுவது நாட்டு மக்களுக்காக அல்ல.மொட்டு கட்சியினருக்காக-ராஜபக்ஸ குடும்பத்துக்காக.
அதனால் அந்தக் குடும்பத்தைப் பாதுகாக்கும் விதமாகச் செயற்படுகிறார்.தங்களை பாதுகாக்கக்கூடிய சிறந்த பாதுகாவலன் ரணில்தான் என்று தெரியும் ராஜபக்ஸ குடும்பத்துக்கு.அதனால்தான் அவரைக் கூட்டி வந்து ஜனாதிபதியாக்கி இருக்கிறார்கள்.
இவர்களின் அரசியல் முடியப்போகிறது.தேர்தல் ஒன்றுக்கு ரணிலால் செல்ல முடியாது.சென்றால் நிச்சயம் படுதோல்வியடைவார்.
ரணில் மட்டுமல்ல.அவரைச் சுற்றியுள்ள அனைவரும் மண் கவ்வுவார்கள்-என்றார்.