தற்போதைய அரசியல்-பொருளாதார நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க
வழங்கிய பேட்டி...
கேள்வி : நீங்கள் அரசுடன் இணையப்போவதாகக் கதை அடிபடுகிறதே?
பதில் : நான் அரசுடன் இணையமாட்டேன்.சிலர் உள்ளார்கள் 24 வருடங்களாக ரணிலை சேர் சேர் என்று சொல்லி இப்போது அவரை எதிர்க்கின்றவர்கள்.அப்படியான கொள்கையில் நான் இல்லை.இருந்தாலும் நான் இணையமாட்டேன்.
நாடு வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது.சர்வகட்சி அரசால் மாத்திரமே இதைக் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் கூறுகிறோம்.அதற்கான செயல்முறை யோசனையையும் சமர்ப்பித்துள்ளோம்.
தேசிய சபையை சரியான முறையில் இயக்கினால் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காண முடியும்.
கேள்வி : ஐக்கிய மக்கள் சக்தியுடன் உங்களுக்கு என்ன பிரச்சினை?
பதில் : ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து விரிவான ஜனநாயக அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க நாங்கள் முயற்சி செய்தோம்.அதற்கான அறிகுறிகள் அங்கு இல்லை.
ஆட்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் இந்தக் கட்சியை முன்நகர்த்த முற்பட்டோம்.அது சரிவரவில்லை. சிறந்த பரம்பரை ஒன்று இருக்கிறது.அவர்கள்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள்.
இதில் படித்தவர்கள்-தொழிலார்கள் என சிறந்தவர்கள் உள்ளனர்.இவர்களை நாட்டின் ஆட்சியை நோக்கி நகர்த்த வேண்டும்.அதுதான் எங்களது திட்டம்.
6 மாதங்கள்,3 மாதங்கள் என்று குறுகிய கால ஆட்சி மாற்றத்துக்குச் செல்வதற்கு நாம் தயாரில்லை.
கேள்வி : ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கத்தில் உங்களது பங்களிப்பு அதிகமாக இருந்ததே..?
பதில் : ஆம்.அந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஸவை தோற்கடிப்பதற்கான ஆற்றல் சஜித் பிரேமதாசாவுக்கே இருக்கிறது என்று ஆய்வுகள் அன்று கூறின.அதற்காகவே நாம் சஜித்துக்கு ஆதரவு வழங்கினோம்.
ஆனால்,ஆட்சியை நோக்கிய சவாலை வெற்றிகொள்வதற்கு அந்தக் கட்சியின் செயற்பாடு போதாது.
இருந்தாலும்,அது பிரதான எதிர்க்கட்சி என்பதால் அதன் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்க எனக்கு விருப்பம் இல்லை.
கேள்வி : நீங்கள் சஜித்தை விட ரணிலுடன் நெருக்கம் அதிகம் எனப் பேசப்படுகிறதே?
பதில் : அப்படி இல்லை.
கேள்வி : பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர்.இதுபற்றி உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில் : இது மிகவும் கவலையான விடயம்.எமது நாட்டில் எமது பணத்தில் கல்வி கற்று இன்று வேறு நாடுகளுக்கு வேலை செய்வதற்குச் செல்கின்றனர்.
இதனால் அன்னியச் செலாவணியின் வருகை அதிகரிக்கும் என்று அரசு சொல்கிறது.இது முற்றிலும் பிழை.
அவர்கள் இங்கிருக்கிற சொத்துக்களை கூட விற்றுக் காசை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.அவர்கள் எப்படி நாட்டுக்கு பணத்தை அனுப்புவார்கள்.?
கேள்வி : கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாடுகளில் உள்ள எம்மவர்கள் வாக்களிப்பதற்காக வந்தனர்.இனி அப்படியொரு நிகழ்வு நடக்குமா?
பதில் : இல்லை.மக்கள் இனியாவது யோசிக்க வேண்டும்.திறமையான ஒருவரை-நல்லமுறையில் ஆட்சி நடத்தக்கூடிய ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டாம்.
இல்லாமல்,எங்களது கட்சித் தலைவர்தான் ஆட்சி செய்ய வேண்டும்;எங்களது கட்சிதான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற மனோநிலையில் இருந்து மக்கள் மாறுபட வேண்டும்.
மக்களால் விரட்டப்பட்ட கோத்தாபய சும்மா ஜனாதிபதி அல்ல.
69 லட்சம் வாக்குகளைப் பெற்றவர்.ஜே.ஆரைப் போன்று முழுமையான நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டவர்.அரச நிர்வாகத்தை இராணுவ அதிகாரிகளை நியமித்து கைக்குள் எடுத்தவர்.
அப்படிப்பட்ட பலமான ஜனாதிபதியைத்தான் மக்கள் நேரடி ஆக்சன் மூலம் விரட்டியடித்தார்கள்.
அவருக்கு ஏற்பட்ட நிலைமை வேறு ஒருவருக்கும் ஏற்படாது என்று சொல்ல முடியாது.
தனக்கு விருப்பம் இல்லாத அரசை தேர்தல் மூலம் தோற்கடிப்பதுபோல் நேரடி அக்சன் மூலமாகவும் தோற்கடிக்க முடியும் என்று மக்கள் நிரூபித்துள்ளார்கள்.
போராட்டத்தை முறியடிப்பதற்காகப் பாடுபடும் ஜனாதிபதியும் பொலிஸ் அமைச்சரும் இதை உணர வேண்டும்.
கேள்வி : மொட்டு கட்சிக்கு அதே மக்கள் ஆணை இருக்கிறதா?
பதில் : இல்லை.அதனால்தான் தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகிறது.மக்களின் தற்போதைய நிலைப்பாட்டை அறிவதற்கு தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும்.
2018 இல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தியபோதுதான் தெரிந்தது மக்கள் இருப்பது மொட்டுவின் பக்கம் என்று.அதேபோல்,இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும்.
கேள்வி : இப்போதைய நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்ல முடியுமா?
பதில் : நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்வதால் இப்போதைய பொருளாதாரப் பிரச்சினைகள் எவையும் தீரா.ஆட்சியாளர்கள்மீது மக்களுக்கு இருக்கும் கோபத்துக்கு தீனி கிடைக்கும்.
கேள்வி : இதன் ஊடாக சரியான ஒரு தலைவரைத் தெரிவு செய்யலாம் அல்லவா?
பத்தி : அதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.வெறும் வாய் வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் சரியாக முகாமைத்துவம் செய்யக்கூடிய-திறமையான தலைவரை மக்கள் அடையாளம் கண்டு தெரிவு செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் 6 மாதங்கள் கழித்து மீண்டும் கோத்தாவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும்.
கேள்வி: பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நீங்கள் கூறும் யோசனை என்ன?
பதில் : பொருளாதார வளர்ச்சிக்கு படையினரை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
அதற்காக குழி வெட்டுவதற்கும்-வெள்ளாமை வெட்டுவதற்கும் -வீதியைத் துப்புரவு செய்வதற்கும் அவர்களை பாவிப்பது அல்ல.
நிறுவனரீதியான செயற்பாட்டில் ஈடுபடுத்த வேண்டும்.சீனாவில் அவ்வாறு செய்தார்கள்.உலகின் பல நாடுகளில் செய்துள்ளார்கள்.
உலகின் முதலிடத்தில் இருக்கும் huawei நிறுவனத்தை இயக்குவது படையினர்தான்.
இலங்கையில் துட்டகைமுனு மண்ணன்கூட அவ்வாறு செய்திருக்கிறார்.
முன்னாள் புலி உறுப்பினர்களைக்கூட பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட அந்த 12 ஆயிரத்து 600 புலி உறுப்பினர்களும் வன்னியில் நிர்கதியாகி இருக்கிறார்கள்.அவர்களிடம் பல்வேறுபட்ட தொழில் அனுபவம் உள்ளது.அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
அப்படி பயன்படுத்தாமல் போனால் அவர்கள் போதைப் பொருள் வர்த்தகத்திலும் பாதாள உலக செயற்பாட்டிலும் ஈடுபடுவார்கள்.-என்றார்.