Home / Sub Lead News
Sub Lead News
பட்டும் திருந்தாத ஜென்மம் 
Wed, 30 Nov 2022 09:09:07 +0530
மொட்டு கட்சி-மஹிந்த தரப்பு ஆட்சியைப் பிடிப்பதற்கு கையில் எடுத்த ஆயுதம் இனவாதம்தான்.இதைத் தவிர வேறெந்த துருப்புச் சீட்டும் இருக்கவில்லை அவர்களின் கையில். சிங்கள மக்கள் மடையர்களாக இருக்கும்வரை இந்த இனவாதத்தை வைத்து அரசியலை ஓட்டலாம் என்பது அவர்களின் கணிப்பு.    இதற்கென அவர்கள் பலரைத் தெரிவு செய்து வைத்தனர்.ஞானசார தேரர்-அத்துரலிய ரத்தின தேரர்-சரத் வீரசேகர எம்பி-விமல் வீரவன்ச எம்பி உள்ளிட்ட பலர் அதற்குள் அடங்குவர். முஸ்லிம்களே அவர்களின் இலக்கு.இஸ்லாமிய பயங்கரவாதம் என்றொரு பதத்தை உருவாக்கி அதைத் தலைப்பாகக் கொண்டு நாடு பூராகவும் பிரசாரம் செய்தனர்-இனவாதத்தைக் கக்கினர். மலட்டுத் தன்மையை உருவாக்கும் மாத்திரைகள்;மலட்டுத்தன்மையை உருவாக்கும் கொத்து ரொட்டி-மலட்டுத் தன்மையை உருவாக்கும் ப்ரா என்றெல்லாம் புதுப்புது கதையை உருவாக்கி இருந்தார்கள். அம்பாறையில் உள்ள முஸ்லிம் ஹோட்டல் ஒன்றில் கொத்து ரொட்டிக்குள் மலட்டுத்தன்மையை உண்டு பண்ணும் மாத்திரைகள் கலக்கப்பட்டன என்று கதையைக் கட்டி அந்த ஹோட்டலைத் தாக்கினார்கள்.அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கினார்கள். இத்தனைக்கும் பின்னணியில் நின்று செயற்பட்டவர் சரத் வீரசேகர என்பது அம்பாறை மாவட்ட மக்கள் அனைவர்க்கும் தெரியும். மேலும்  மதரஸாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுகிறது என்று அதற்கு எதிராகப் பிரசாரம் செய்தவரும் இவர்தான். இவர்கள் எல்லோரும் சேர்ந்து செய்த அந்தப் பாவத்தின் காரணமாகத்தான் இரண்டு வருடங்களில் அவர்களது தலைவர் கோத்தா பதவியையும் விட்டு-நாட்டையும் விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது. இன்று இவர்களுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற ஆதரவு வெறும் 10 வீதம்தான். இனவாதத்தை வைத்து-முஸ்லிம்களைத் தூற்றி எம்மை ஏமாற்றிவிட்டார்கள்;எம்மை ஏமாற்றி எமது வாக்குகளை அபகரித்துவிட்டார்கள்.இனி அப்படியானதொரு நிலைக்கு இடங்கொடுக்கக்கூடாது என்று சிங்கள மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். அன்று இனவாதத்தை ஊக்குவித்த ஊடகங்களை சிங்கள மக்கள் இன்று விமர்சிக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க.. மொட்டுக் கட்சிக்குள் இன்னும் இனவாதத்தை வைத்து-அதை நம்பி அரசியல் பிழைப்பு நடத்துகின்ற சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறானவர்களுள் இந்த சரத் வீரசேகரவும் ஒருவர்.இரத்தத்தில் இனவாதம் ஊறிப்போன அவர் நாடாளுமன்றில் ஆற்றிய அந்த உரையை நாம் கண்டோம். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு-அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என எல்லோரும் கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் சரத் வீரசேகரவோ அதை எதிர்த்துப் பேசுகிறார். அதனூடாக அவர் இனவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் விதைக்க முற்படுகிறார். சிங்கள மக்கள் இப்போது விழித்துக்கொண்டார்கள். ஆனால்,சரத் வீரசேகர போன்றவர்கள் இன்னும் உறக்கத்திலேயே உள்ளார்கள்.
மீண்டும் வெடிக்கும் 
Wed, 30 Nov 2022 08:57:14 +0530
நாட்டில் உக்கிரமடைந்து செல்லும் பொருளாதார நிலைமை காரணமாக மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.அவர்கள் ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு அஞ்சப் போவதில்லை என்று முஜிபுர் ரஹ்மான் எம்பி தெரிவித்துள்ளார். மக்கள் இனிப் போராட்டம் நடத்தினால் இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என்று ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முஜிபுர் ரஹ்மான் எம்பி இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்; ஜனாதிபதி இப்போது நன்றாகக் குழம்பிப் போய் இருக்கிறார்.நாட்டின் நிலைமை மேலும் மேலும் மோசமடைந்துகொண்டு செல்கிறதே தவிர முன்னேற்றமடையவில்லை. இதனால் மீண்டும் மக்கள் வீதிக்கு வருவார்கள்.இதை உணர்ந்ததால்தான் ஜனாதிபதி இந்த நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர்களை இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என்று கூறியுள்ளார். மக்கள் இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை.அவர்கள் மீண்டும் வீதிக்கு வருவார்கள். ஜனாதிபதி பிரதமராவதற்கு முன் நாடாளுமன்றில் ஆற்றிய உரைகளை கொஞ்சம் எடுத்துப் பாருங்கள்.மக்கள் போராட்டத்துக்கு நூறு வீத ஆதரவு தெரிவித்துப் பேசி இருந்தார்.நூறு வீத ஜனநாயகவாதியாகத் தன்னைக் காட்டி இருந்தார். போராட்டக்காரர்களின் குரலுக்கு காது கொடுக்க வேண்டும்.அவர்களின் போராட்டம் சரியானது என்றெல்லாம் கூறி இருந்தார். இன்று ஜனாதிபதியானதும் அப்படியே தலைகீழாக மாறிவிட்டார்.அவர் செயற்படுவது நாட்டு மக்களுக்காக அல்ல.மொட்டு கட்சியினருக்காக-ராஜபக்ஸ குடும்பத்துக்காக. அதனால் அந்தக் குடும்பத்தைப் பாதுகாக்கும் விதமாகச் செயற்படுகிறார்.தங்களை பாதுகாக்கக்கூடிய சிறந்த பாதுகாவலன் ரணில்தான் என்று தெரியும் ராஜபக்ஸ குடும்பத்துக்கு.அதனால்தான் அவரைக் கூட்டி வந்து ஜனாதிபதியாக்கி இருக்கிறார்கள். இவர்களின் அரசியல் முடியப்போகிறது.தேர்தல் ஒன்றுக்கு ரணிலால் செல்ல முடியாது.சென்றால் நிச்சயம் படுதோல்வியடைவார். ரணில் மட்டுமல்ல.அவரைச் சுற்றியுள்ள அனைவரும் மண் கவ்வுவார்கள்-என்றார்.  
முன்னாள் புலி உறுப்பினர்களை  அதற்குப் பயன்படுத்த வேண்டும் 
Wed, 30 Nov 2022 06:02:11 +0530
தற்போதைய அரசியல்-பொருளாதார நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க   வழங்கிய பேட்டி...   கேள்வி : நீங்கள் அரசுடன் இணையப்போவதாகக் கதை அடிபடுகிறதே? பதில் : நான் அரசுடன் இணையமாட்டேன்.சிலர் உள்ளார்கள் 24 வருடங்களாக ரணிலை சேர் சேர் என்று சொல்லி இப்போது அவரை எதிர்க்கின்றவர்கள்.அப்படியான கொள்கையில் நான் இல்லை.இருந்தாலும் நான்  இணையமாட்டேன். நாடு வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது.சர்வகட்சி அரசால் மாத்திரமே இதைக் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் கூறுகிறோம்.அதற்கான செயல்முறை யோசனையையும் சமர்ப்பித்துள்ளோம். தேசிய சபையை சரியான முறையில் இயக்கினால் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காண முடியும். கேள்வி : ஐக்கிய மக்கள் சக்தியுடன் உங்களுக்கு என்ன பிரச்சினை? பதில் : ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து விரிவான ஜனநாயக அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க நாங்கள் முயற்சி செய்தோம்.அதற்கான அறிகுறிகள் அங்கு இல்லை. ஆட்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் இந்தக் கட்சியை முன்நகர்த்த முற்பட்டோம்.அது சரிவரவில்லை. சிறந்த பரம்பரை ஒன்று இருக்கிறது.அவர்கள்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். இதில் படித்தவர்கள்-தொழிலார்கள் என சிறந்தவர்கள் உள்ளனர்.இவர்களை நாட்டின் ஆட்சியை நோக்கி நகர்த்த வேண்டும்.அதுதான் எங்களது திட்டம். 6 மாதங்கள்,3 மாதங்கள் என்று குறுகிய கால ஆட்சி மாற்றத்துக்குச் செல்வதற்கு நாம் தயாரில்லை. கேள்வி : ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கத்தில் உங்களது பங்களிப்பு அதிகமாக இருந்ததே..? பதில் : ஆம்.அந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஸவை தோற்கடிப்பதற்கான  ஆற்றல் சஜித் பிரேமதாசாவுக்கே இருக்கிறது என்று ஆய்வுகள் அன்று கூறின.அதற்காகவே நாம் சஜித்துக்கு ஆதரவு வழங்கினோம். ஆனால்,ஆட்சியை நோக்கிய சவாலை வெற்றிகொள்வதற்கு அந்தக் கட்சியின் செயற்பாடு போதாது.   இருந்தாலும்,அது பிரதான எதிர்க்கட்சி என்பதால் அதன் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்க எனக்கு விருப்பம் இல்லை.  கேள்வி : நீங்கள் சஜித்தை விட ரணிலுடன் நெருக்கம் அதிகம் எனப் பேசப்படுகிறதே? பதில் : அப்படி இல்லை. கேள்வி : பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர்.இதுபற்றி உங்களின் நிலைப்பாடு என்ன? பதில் : இது மிகவும் கவலையான விடயம்.எமது நாட்டில் எமது பணத்தில் கல்வி கற்று இன்று வேறு நாடுகளுக்கு வேலை செய்வதற்குச் செல்கின்றனர். இதனால் அன்னியச் செலாவணியின் வருகை அதிகரிக்கும் என்று அரசு சொல்கிறது.இது முற்றிலும் பிழை. அவர்கள் இங்கிருக்கிற சொத்துக்களை கூட விற்றுக் காசை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.அவர்கள் எப்படி நாட்டுக்கு பணத்தை அனுப்புவார்கள்.? கேள்வி : கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாடுகளில் உள்ள எம்மவர்கள் வாக்களிப்பதற்காக வந்தனர்.இனி அப்படியொரு நிகழ்வு நடக்குமா? பதில் : இல்லை.மக்கள் இனியாவது யோசிக்க வேண்டும்.திறமையான ஒருவரை-நல்லமுறையில் ஆட்சி நடத்தக்கூடிய ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டாம். இல்லாமல்,எங்களது கட்சித் தலைவர்தான் ஆட்சி செய்ய வேண்டும்;எங்களது கட்சிதான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற மனோநிலையில் இருந்து மக்கள் மாறுபட வேண்டும். மக்களால் விரட்டப்பட்ட கோத்தாபய சும்மா ஜனாதிபதி அல்ல. 69 லட்சம் வாக்குகளைப் பெற்றவர்.ஜே.ஆரைப் போன்று முழுமையான நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டவர்.அரச நிர்வாகத்தை இராணுவ அதிகாரிகளை நியமித்து கைக்குள் எடுத்தவர். அப்படிப்பட்ட பலமான ஜனாதிபதியைத்தான் மக்கள் நேரடி ஆக்சன் மூலம் விரட்டியடித்தார்கள். அவருக்கு ஏற்பட்ட நிலைமை வேறு ஒருவருக்கும் ஏற்படாது என்று சொல்ல முடியாது. தனக்கு விருப்பம் இல்லாத அரசை தேர்தல் மூலம் தோற்கடிப்பதுபோல் நேரடி அக்சன் மூலமாகவும் தோற்கடிக்க முடியும் என்று மக்கள் நிரூபித்துள்ளார்கள். போராட்டத்தை முறியடிப்பதற்காகப் பாடுபடும் ஜனாதிபதியும் பொலிஸ் அமைச்சரும் இதை உணர வேண்டும். கேள்வி : மொட்டு கட்சிக்கு அதே மக்கள் ஆணை இருக்கிறதா? பதில் : இல்லை.அதனால்தான் தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகிறது.மக்களின் தற்போதைய நிலைப்பாட்டை அறிவதற்கு தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும். 2018 இல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தியபோதுதான் தெரிந்தது மக்கள் இருப்பது மொட்டுவின் பக்கம் என்று.அதேபோல்,இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். கேள்வி : இப்போதைய நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்ல முடியுமா? பதில் : நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்வதால் இப்போதைய பொருளாதாரப் பிரச்சினைகள் எவையும் தீரா.ஆட்சியாளர்கள்மீது மக்களுக்கு இருக்கும் கோபத்துக்கு தீனி கிடைக்கும். கேள்வி : இதன் ஊடாக சரியான ஒரு தலைவரைத் தெரிவு செய்யலாம் அல்லவா? பத்தி : அதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.வெறும் வாய் வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் சரியாக முகாமைத்துவம் செய்யக்கூடிய-திறமையான தலைவரை மக்கள் அடையாளம் கண்டு தெரிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 6 மாதங்கள் கழித்து மீண்டும் கோத்தாவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும். கேள்வி: பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நீங்கள் கூறும் யோசனை என்ன? பதில் : பொருளாதார வளர்ச்சிக்கு படையினரை சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதற்காக குழி வெட்டுவதற்கும்-வெள்ளாமை வெட்டுவதற்கும் -வீதியைத் துப்புரவு செய்வதற்கும் அவர்களை பாவிப்பது அல்ல. நிறுவனரீதியான செயற்பாட்டில் ஈடுபடுத்த வேண்டும்.சீனாவில் அவ்வாறு செய்தார்கள்.உலகின் பல நாடுகளில் செய்துள்ளார்கள். உலகின் முதலிடத்தில் இருக்கும் huawei நிறுவனத்தை இயக்குவது படையினர்தான். இலங்கையில் துட்டகைமுனு மண்ணன்கூட அவ்வாறு செய்திருக்கிறார். முன்னாள் புலி உறுப்பினர்களைக்கூட  பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.  புனர்வாழ்வளிக்கப்பட்ட அந்த 12 ஆயிரத்து 600 புலி உறுப்பினர்களும் வன்னியில் நிர்கதியாகி இருக்கிறார்கள்.அவர்களிடம் பல்வேறுபட்ட தொழில் அனுபவம் உள்ளது.அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தாமல் போனால் அவர்கள் போதைப் பொருள் வர்த்தகத்திலும் பாதாள உலக செயற்பாட்டிலும் ஈடுபடுவார்கள்.-என்றார்.    
சீனித் திருடனும்  வங்கித் திருடனும் உருவாக்கிய அரசு 
Mon, 16 May 2022 13:26:54 +0530
இது சீனித் திருடனும் வங்கித் திருடனும் இணைந்து உருவாக்கிய அரசு.இதில் நாம் இணைந்து கொள்ளமாட்டோம்.என்று ஜேவிபி எம்பி விஜித ஹேரத் கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்: இது மக்கள் விருப்பத்தின்படி அல்லது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் ஆலோசனைப்படி உருவான அரசு அல்ல. ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சதியால் உருவான அரசு இது.இன்னும் அமைச்சரவையை அமைக்க முடியாமல் அதற்காக அமைச்சர்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். சுதந்திரக் கட்சியில் சிலரும் நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சுக்கு  ஆசையுள்ளவர்களும் இந்த அரசில் இணைய வாய்ப்புண்டு. தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு உரிய தீர்வை இவர்கள் இன்னும் முன்வைக்கவில்லை.அகிலவிராஜ் காரியவசம்,சாகல ரத்நாயக்க மற்றும் வஜிர அபயவர்தன ஆகியோரை வைத்து குழு உருவாக்கி அந்தக் குழுவே பொருளாதார பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளது.இவர்களை வைத்து எப்படி பிரச்சினையைத் தீர்க்க முடியும். இது கேலிக்கூத்தாகும்.இவர்களால் ஒருபோதும் பொருளாதார பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இந்த நாட்டை பாரமேற்று பிரச்சினைகளைத் தீர்க்க நாம் தயார்.ஆனால்,ஜனாதிபதி விலகினால் மட்டுமே அது சாத்தியம் என்றார்.
படகுகள் வாங்க  பிரபாகரனுக்கு 2 மில்லியன் டொலர் கொடுத்த பஸில்! 
Sun, 24 Apr 2022 11:39:12 +0530
புலிகளின் தலைவர் பிரபாகரன் படகுகள் கொள்வனவு செய்வதற்காக பஸில் ராஜபக்ஸ அப்போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கினார் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்: நாடு இப்போது மிகவும் இக்கட்டான கட்டத்தில் உள்ளது.நாடாளுமன்றில் உள்ள அதிகமானவர்கள் பணம் சம்பாதிக்கும் வியாபாரிகள்தான்.நாடாளுமன்றில் உள்ள 90 வீதமானவர்கள் ஊழல்வாதிகள். அதிகமான அரசியல்வாதிகள் பலவீனமானவர்கள். என்னிடம் அதிகாரத்தை ஒப்படைத்தால் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கி 2 வருடங்களில் நாட்டைக் கட்டி எழுப்புவேன். நாடு வீழ்ச்சி அடையும் இந்த நேரத்தில் சவாலை ஏற்று நாட்டை பாரமெடுக்க தலைவர்கள் யாரும் தயாரில்லை. நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து நாட்டைக் கட்டி எழுப்ப முடியாது.அரசமைப்பில் மாற்றம் செய்தால்கூட நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டால்கூட நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு பின் என்ன செய்வது என்ற உறுதியான நிலைப்பாடு இல்லை. இந்த நேரம் நாட்டை பாரமேற்காவிட்டால் எதிர்க்கட்சியாக இருந்து வேலை இல்லை. ரணில் நினைத்துக்கொண்டு இருக்கிறார் அவரைத் தவிர  பொருளாதார நிபுணர் யாரும் இல்லை என்று.5 தடவைகள் பிரதமராக இருந்து அவர் நாட்டுக்குச் செய்தது ஒன்றுமில்லை. மஹிந்த ராஜபக்ஸ புலிகளுடன் போர் செய்ய விரும்பவில்லை.பயத்தில் இருந்தார்.எனது விருப்பத்தின் பேரிலேயே போர் செய்யப்பட்டது. புலிகளின் தலைவர் பிரபாகரன் படகுகள் கொள்வனவு செய்வதற்காக பஸில் ராஜபக்ஸ அப்போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கினார் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.என்றார்.
பிரதமர் விலகாவிட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு: சுயாதீன எம்பிக்கள் 40 பேர் எச்சரிக்கை
Sun, 24 Apr 2022 10:33:57 +0530
இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கு வசதியாக மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று சுயாதீன எம்பிக்கள் 40 பேரும் மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி விலகாவிட்டால் எதிர்க்கட்சி கொண்டு வரும் நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவோம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று அறிய முடிகிறது. ஆனால்,இடைக்கால அரசு உருவானால் அதிலும் நானே பிரதமர் என்று மஹிந்த நேற்று தெரன தொலைக்காட்சியிடம் கூறியமை குறிப்பிடத்தக்கது.  
சஜித் பார்த்த வேலையால் சபையை ஒத்திவைத்தார் சபாநாயகர்
Fri, 22 Apr 2022 11:22:09 +0530
இன்று காலை தொடங்கிய நாடாளுமன்ற அமர்வின்போது சபாநாயரின் உத்தரவைமீறி எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா உரையாற்றியதால் சபையை ஒத்திவைத்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்தன. இன்று காலை 10 மணிக்கு சபாநாயர்கர் தலைமையில் சபை கூடியது.நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அரசமைப்பின் 21 ஆம் திருத்தச் சட்டமூலத்தை 41 உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீன எம்பிக்கள் நேற்று சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர். அது சட்டமா அதிபரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார்.அது தொடர்பில் விஜயதாசா ராஜபக்ஸ சில கருத்துக்களைக் கூறினார். அதனைத் தொடர்ந்து சஜித் பிரேமதாஸா எழுந்தார்.பொருளாதாரத்தைக்  கட்டியெழுப்ப அரசு வகுத்திருக்கும் திட்டங்கள் பற்றி இன்று பிற்பகல் அறிவிக்குமாறு அவர் நேற்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில்  கேட்டிருந்தார்.அதை இன்று சபையில் நினைவூட்டினார். அத்தோடு நிறுத்தாமல் தொடர்ந்து பேசத் தொடங்கினார்.அது நீண்ட விவாதமாக அமைவதால் உடனடியாக பேசுவதை நிறுத்துமாறும் நீங்கள் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் சபாநாயகர் கூறினார். சஜித் அப்போதும் நிறுத்தவில்லை.இதனால் அரச தரப்பில் பிரசன்ன ரணதுங்கவும் எழுந்து சஜித்துக்கு எதிர்ப்பை வெளியிட்டார்.இவர் இப்படி உரையாற்றுவதாக இருந்தால் எமக்கும் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். உடனடியாக உரையாற்றுவதை நிறுத்துங்கள்.இல்லாவிட்டால் தான் சபையை ஒத்திவைத்துவிடுவேன் என்று கூறினார் சபாநாயகர். சஜித் காதில் வாங்காது.தொடர்ந்தும் உரையாற்றினார்.இதனால் சபையை உடனடியாக ஒத்திவைத்தார் சபாநாயகர்.
ரம்புக்கன நகரே அழிந்திருக்கும்...
Wed, 20 Apr 2022 14:14:53 +0530
எரிபொருள் பௌஸருக்கு தீ வைத்திருந்தால் ரம்புக்கன நகரே அழிந்திருக்கும்.அதில் இருந்து பாதுகாப்பதற்காகவே பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று நாடாளுமன்றில் கூறினார். ரம்புக்கன சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்; நாட்டில் பல இடங்களில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது..அதை மதிக்கும் அரசு நாம்.அதேபோல்,ஆர்ப்பாட்டம் செய்யாத மக்களின் உரிமைகள்,அன்றாட செயற்பாடுகளை பாதுகாக்கும் அரசு நாம். பொலிஸார் கடந்த காலங்களில் நடந்த ஆர்பாட்டங்களின்போது மிகவும் பொறுமையாகவும் பொறுப்பாகவும் நடந்துகொண்டனர். நேற்று நடந்த ரம்புக்கன ஆர்ப்பாட்டத்தின்போது பஸ் வாகனங்களை கொண்டு வீதிகளை மறைத்து மக்களின் செயற்பாடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையூறு விளைவித்தனர். அந்த ஆர்பாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார்  நடவடிக்கை எடுத்தார்கள்.ஆர்ப்பாட்டக்காரர்கள் பாடசாலை மாணவர்களுக்கும்-ஏனைய பயணிகளுக்கும் இடையூறு விளைவித்தனர். ஓட்டோ ஒன்றுக்கு தீ வைத்தனர்.எரிபொருள் உடன் நின்ற பௌஸருக்கும் தீ வைக்க முற்பட்டனர்.அவ்வாறு தீ வைத்திருந்தால் இன்று ரம்புக்கன நகர் இல்லை.முழுவதுமாக அழிந்திருக்கும். அதைக் கட்டுப்படுத்துவதற்காகவே பொலிஸார் அவர்களின் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்தனர்.இது தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் அதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
ரஞ்சனுக்கு விடுதலை இல்லை 
Fri, 04 Feb 2022 06:48:34 +0530
நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி 197 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.அவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவர்.இந்தப் பட்டியலில் முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்காவின் பெயர் இல்லை. அவருக்கு இந்த சுதந்திர தினத்தில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா உள்ளிட்ட அக்கட்சியின் பலரும்  கோரிக்கை விடுத்து வந்தனர். பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்படும் கைதிகளின் பெயர் பட்டியலில் ரஞ்சனின் பெயர் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால்,பெயர் இல்லை.அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை.
ஜேவிபியுடன் சு.க கூட்டணியா?
Thu, 23 Dec 2021 09:20:39 +0530
எத்ரிகாலத்தில் ஜேவிபியுடன் அரசியல் கூட்டணி அமைப்பதற்கு சுதந்திர கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஜேவிபி ஒரு தூய்மையான கட்சி என்றும் அக்கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ஜேவிபியுடன் சுதந்திர கட்சி இணைவதென்பது புதிய விடயம் அல்ல என்று கூறிய தயாசிறி கடந்த காலங்களில் அப்படியான இணைவு இடம்பெற்றது என்றும் சொன்னார். அடுத்து வரும் தேர்தல்களில் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துச் செயற்படுவதற்கு சு.க முடிவெடுத்துள்ளது.அது ஜேவிபியுடனும் இணைவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 
Popular News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us