Home / Lead News
Lead News
இஸ்லாமிய எதிர்ப்பின் ஊடாக  ஆட்சியப் பிடித்த  மஹிந்த அணி
Wed, 30 Nov 2022 08:29:24 +0530
தமிழர்கள் கோரி நிற்கும் அதிகாரப் பகிர்வு.ஆட்சியைக் கைப்பற்ற மஹிந்த அணி மேற்கொண்ட நடவடிக்கைகள்-21ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் உண்மையான நோக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி கூறுகிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பி ராசமாணிக்கம் சாணக்கியன்.அவர் வழங்கிய பேட்டியின் முழு விவரம் கீழே: கேள்வி :2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பற்றி உங்களது நிலைப்பது என்ன? பதில் : இந்த வரவு-செலவுத் திட்டத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.காணாமல் போனமை உள்ளிட்ட போரால் பாதிக்கப்பட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழர்களுக்கு உதவுவதற்காக இந்த பட்ஜட் முன்வரவில்லை. மஹிந்தவால் அமைக்கப்பட்ட LLRC குழுவின் அறிக்கையை மஹிந்த நடைமுறைப்படுத்தாமை காரணமாகவே 2012 இலங்கை ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு முன் நிலையில் நிறுத்தப்பட்டது. கைகளில் பேனாவை வைத்திருந்த தமிழ் இளைஞர்கள் அதை வீசிவிட்டு துப்பாக்கியை கையில் எடுப்பதற்கு காரணம் இருந்தது.இதை உலக நாடுகளே கூறியுள்ளன. துப்பாக்கியால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.அரசியல்ரீதியாக  தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நூறு வீதம் இலங்கை அரசுக்கு உதவுகிறோம் என்று உலக நாடுகள் கூறின.ஆனால்,மஹிந்த அதைச் செய்யவில்லை. இதனால்தான் இலங்கை 2012 இல் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.இப்போதும் அப்படியே.இந்த வரவு-செலவு திட்டமும் அப்படியே. இந்த நாட்டு மக்கள் அப்பாவிகள்.அது எந்த இனமாக இருந்தாலும் சரி.அந்த அப்பாவித் தனத்தைப் -பயன்படுத்தித்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் மஹிந்த தரப்பினர். 2015 தோல்விக்கு பின் மீண்டும் மஹிந்த அலை என்ற ஒன்றை உருவாக்கினார்கள்.முஸ்லிம்களுக்கு எதிரான கோசத்தை முன்வைத்தே அவர்கள் அரசியல் செய்தனர். மலட்டுத் தன்மையை உருவாக்கும் மாத்திரைகள்-மலட்டுத் தன்மையை உருவாக்கும் கொத்து ரொட்டி-தவ்ஹீத் ஜமாஅத்-இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் இஸ்லாத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்துதான் மஹிந்த அணி மீண்டும் 2019இல் ஆட்சியைப் பிடித்தது. இறுதியில் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதை மக்கள் இப்போது உணர்கிறார்கள். அடுத்து வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்த இனவாதம் எடுபடாது.சரியான பொருளாதாரக் கொள்கை உள்ள ஒருவரையே மக்கள் இனி ஆதரிப்பார்கள்.அந்தளவு துன்பத்தில் மக்கள் இப்போது உள்ளார்கள். இனி எந்தவோர் இனவாதமும் எடுபடாது. கேள்வி : தமிழர்கள் கேட்கும் அரசியல் தீர்வு எப்படிப்பட்டது? பதில் : வடக்கு-கிழக்கு மக்கள் தங்களின் பிரச்சினைகளை அவர்களாகவே தீர்த்துக்கொவதற்குத்தான் அதிகாரப் பகிர்வைக் கேட்கிறார்கள். அந்தப் பகுதியில் இராணுவத்தை உருவாக்கவோ-சீனாவுக்கு அல்லது இந்தியாவுக்கு இடங்களை விற்கவோ அதிகாரத்தைக் கேட்கவில்லை. அந்த மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காகவே அதிகாரத்தைக் கேட்கிறார்கள். ஆனால்,அதைக் கொடுக்காமல் இருப்பதற்காக போலிக் காரணம் ஒன்றை இந்த அரசியல் தலைவர்கள் கூறி வருகிறார்கள். அதிகாரப் பகிர்வைக் கொடுத்தால் தமிழீழம் உருவாகும் என்று கூறி சிங்கள மக்களை பயமுறுத்தி வருகிறார்கள். அதிகாரத்தைப் பகிர்வதன் மூலம் பொருளாதாரத்தை மிக இலகுவாகக் கட்டி எழுப்ப முடியும். கேள்வி : 1987 இல் இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஊடாக மாகாண சபை முறைமை உருவாக்கபட்டதே வடக்கு-கிழக்கிற்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்குத்தான்.அது தோல்வியடைந்தது ஏன்? பதில் : அப்போதிருந்த தமிழ்-சிங்கள தலைவர்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தை ஏற்கவில்லை.அதிகாரப் பகிர்வு தொடர்பில் தோல்வியடையக்கூடிய விடயங்கள் பல அதில் உள்ளன. குறிப்பாக,அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுத்தாலும் அதிகாரத்தைப் பெறுபவரால் சுயாதீனமாக வேலை செய்ய முடியாது.மத்தியில் இருந்து அழுத்தம்.ஜனாதிபதியின் விருப்பப்படியே இவர் செயற்பட வேண்டும்.அது உண்மையான அதிகாரப்பகிர்வு அல்ல. அதுபோல் ஆளுநர் நியமனம்.அவருக்கு உச்ச அதிகாரம் வழங்கப்படுகிறது.மாகாண சபை எடுக்கின்ற எந்தவொரு முடிவையும் நிராகரிக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. கேள்வி : நடுநிலையாக நின்று பார்க்கும் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்ன? பதில் : இந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் அதிகாரப் பகிர்வு வழங்காமைதான். இதனால்தான் போர் உருவானது. அதற்காக வெளிநாடுகளில் கடன் வாங்கப்பட்டது.சுற்றுலா உட்பட பல துறைகள் வீழ்ச்சியடைந்தன.30 வருடங்களாக இந்த நிலை தொடர்ந்தது. அப்போதே அதிகாரப் பகிர்வை வழங்கி இருந்தால் இந்த நிலைமை உருவாகி இருக்காது. இப்போதும் அரசு பாதுகாப்புக்காகத்தான் அதிக நிதியை வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளது. அது படையினரின் நலன்புரிக்காக அல்ல.இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் வடக்கில் முகாம்களை அமைப்பதற்கும்தான் அந்த நிதி. முல்லைத்தீவில் சிவிலியன்கள் 10 பேருக்கு ஒரு இராணுவச் சிப்பாய் என்ற அடிப்படையில் இராணுவம் உள்ளனர். 2009 இல் 2.5 லட்சம் இராணுவம் இருந்தது.இப்போது 3.5 அல்லது 4 லட்சமாக உள்ளனர். அதிகமான செலவு இதற்கே செல்கிறது.இனியும் யாருடன் போர் செய்வதற்காக இப்படிச் செய்கிறீர்கள்?  இதனால் இவ்வாறான செயற்பாட்டை விட்டுவிட்டு தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றுதான் நடுநிலை வகிக்கும் அனைவரும் கூறுகிறார்கள்.  கேள்வி : அங்குள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? பதில் ; அங்குள்ள முஸ்லிம் மக்களின் தாய் மொழியும் தமிழ் மொழிதான்.அதனால் தமிழ் பேசும் மக்கள் என்றே தமிழ்-முஸ்லிம்களை அழைக்கிறோம். தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசும்போதெல்லாம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றியும்தான் பேசுகிறோம். இனத்தால் வேறுபட்டாலும் நாம் மொழியால் ஒன்றுபட்டுள்ளோம். கேள்வி : 21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு ? பதில் ; அதனால் நாட்டுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எந்த நன்மையையும் இல்லை.நாடு எதிர்பார்த்து நிற்கும் ''முறைமை மாற்றம் '' எல்லாம் இதற்குள் இல்லை. சிலரது தேவை 2.5 வருடங்களில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குச் செல்ல வேண்டும். சிலரது தேவை இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்ப்பது.அதாவது,குறிப்பாக,பஸில் ராஜபக்ஸ நாடாளுமன்றம் செல்வத்தைத் தவிர்ப்பது. இவற்றைத் தவிர வேறு எந்த நோக்கமும் இந்த 21 இல் கிடையாது.இதனால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. கேள்வி : புதிய அரசமைப்புக்குள் அதிகாரப் பகிர்வு எப்படி இருக்க வேண்டம் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? பதில் : அணைத்து இன மக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு-அவர்களின் இணக்கத்தோடு-நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய-ஒவ்வோர் இனத்தினதும் தனித்துவத்தைப் பாதுகாக்கக்கூடிய வகையில்தான் அரசமைப்பு அமைய வேண்டும்.
ரணிலுடன் இணையும் சஜித் தரப்பின் 20 எம்பிக்கள்: தடுக்கும் நடவடிக்கையில் சஜித் தீவிரம்..
Thu, 18 Aug 2022 08:36:22 +0530
ரணிலின் அரசுடன் சஜித் தரப்பு எம்பிக்கள் சுமார் 20 பேர் வரை இணையவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுள் சிரேஷ்ட தலைவர்களும் கட்சித் தலைவர்களும் அடங்குகின்றனர் என்று அறிய முடிகிறது. இவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பல தடவைகள் ரகசிய பேச்சுக்குக்களை  நடத்தியுள்ளனர் என்று ரணில் தரப்பு தகவல்கள் கூறுகின்றன. ரணில் ஜனாதிபதியானது முதல் ஏனைய கட்சிக்களின் எம்பிக்களை வளைத்துப் போடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் அதன் பயனாகவே இந்த இணைவு இடம்பெறப்போகிறது என்றும் அறிய முடிகிறது. இந்தச் செய்தி அறிந்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் சஜித் பிரேமதாசா இறங்கியுள்ளார் என்றும் அது தொடர்பில் அவர் அவரது கட்சி எம்பிக்களை சந்திக்கிறார் என்றும் அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை,அனைத்துக் கட்சிகளையும் இணைத்து சர்வகட்சி அரசு ஒன்றை அமைப்பதற்கான முயற்சியும் ஒரு பக்கம் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.
பெரும்பான்மையை நிரூபிக்கும் போட்டி:  இரண்டாகப் பிளவுபடும் பல கட்சிகள் 
Sun, 15 May 2022 11:06:28 +0530
ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஜனாதிபதி நேற்று இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் எம்பிக்களை சந்தித்து கலந்துரையாடினார். பொதுஜன பெரமுனவின் எம்பிக்கள் பலர் சுயாதீன குழுவாக மாறியதால் அரசு பெரும்பான்மையை இழந்தது. இந்தநிலை,மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகியதால் பொதுஜன பெரமுனவில் உள்ள மஹிந்தவின் ஆதரவு எம்பிக்கள் பலர் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்குத் தயாராகி வருகின்றனர் என்று தகவல்கள தெரிவிக்கின்றன. அதேபோல்,சுயாதீன குழுவில் இணைந்துள்ள எம்பிக்கள் பலர் புதிய அரசில் இணைவதற்குத் தயாராகி வருகின்றனர் என்றும் அறிய முடிகிறது. மேலும்,ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கின்ற பல எம்பிக்களை அரசில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. இந்த அடிப்படையில் சில கட்சியில் அரசில் இணைவதற்கு பலர் திட்டமிட்டுள்ளதாலும் பொதுஜன பெரமுனவில் இருந்து சிலர் எதிர்கட்சிக்கு செல்லவிருப்பதாலும் எல்லா கட்சிகளும் இரண்டாகப் பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
மஹிந்தவின் தீர்மானம் இன்று: அவருக்கு ஆதரவாக அலரிமாளிகையில் ஒன்றுகூடும் எம்பிக்கள்  
Mon, 09 May 2022 09:10:22 +0530
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதா ,இல்லையா என்ற தீர்மானத்தை மஹிந்த ராஜபக்ஸ இன்று அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மஹிந்தவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கேட்டிருந்தார் என்றும் அதன்படி இன்று மஹிந்த அவரது தீர்மானத்தை அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை,அவரை விலக வேண்டாம் என்று கோரி எம்பிக்கள் பலர் இன்று காலை அலறி மாளிகையில் ஒன்றுகூடுகின்றனர். மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகினால் மாத்திரம் நாட்டின் பொருளாதார பிரச்சினை தீர்ந்துவிடாது என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஜனாதிபதி இணக்கம்:வெள்ளிக் கிழமை விசேட கூட்டம்  
Wed, 27 Apr 2022 13:01:15 +0530
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சீர் செய்வதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி அரசொன்றை உருவாக்குவதற்குத் தான் தயார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரசில் அங்கம் வகிக்கும் மற்றும் சுயாதீனமாகச் செயற்படும் கட்சித் தலைவர்களிடம் எழுத்து மூலம் இதைத் தெரிவித்துள்ளார். அணைத்து அரசியல் கட்சிகளும் சமயத் தலைவர்களும் இதையே வலியுறுத்துகிறார்கள் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர்,அமைச்சரவை முற்றாக விலகுதல்,புதிய பிரதமரிடம் அமைச்சரவையை பாரம் கொடுத்தல்,அந்த அமைச்சரவை செயற்படும் கால எல்லை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகப் பேசுவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறுகிறது. ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டத்துக்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 எம்பிக்கள் பல்டி: பெரும்பான்மையை இழக்கிறது அரசு: மே,4இல் நடக்கப்போகிறது...
Sun, 24 Apr 2022 09:51:26 +0530
மே மாதம் 4ஆம் திகதி பெரும்பான்மையை இழக்கிறது அரசு.அரசுக்கு இருக்கும் 116 ஆசனங்களில் 10  ஆசான்களை இழக்கிறது அரசு. மே 4 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது அரசில் இப்போது இருக்கின்ற எம்பிக்கள் 10 பேர் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளனர் என்று அறிய முடிகிறது. அன்றைய தினம் இந்த 10 பேரும் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்குத் தீர்மானித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அன்றைய தினம் அரசிடம் எஞ்சி இருக்கப்போவது 106 மட்டுமே. இதனால் அரசு மேலும் தலையிடியை எதிர்கொள்ளும் என்று ஊகிக்க முடிகிறது. தொடர்ந்தும் அரசுக்கு முட்டுக்கொடுப்பதால் தங்களின் அரசியல் எதிர்காலம் அழிந்து போய்விடும் என்று அஞ்சியே இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
ரம்புக்கன சம்பவம்:நாடாளுமன்றில் கூச்சல் -குழப்பம்:சபை ஒத்திவைப்பு 
Wed, 20 Apr 2022 14:48:56 +0530
ரம்புக்கன துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக இன்று நாடாளுமன்றில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இன்று காலை நாடாளுமன்றம் கூடியபோது நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இந்தப் பிரச்சினையைக் கிளப்பி இது தொடர்பில் பேசுவதற்காக சிறிது நேரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி ஒரு முடிவெடுப்போம் என்று சபாநாயகரிடம் கூறினார். அப்போது இதுபற்றி அரசின்  நிலைப்பாட்டை தற்போது வெளியிடவுள்ளேன் என்று பிரசன்ன ரணதுங்க கூறினார். அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அங்கு,இங்கு கூட்டம் கூட்டி காலத்தை வீணடிக்கத் தேவை இல்லை.இங்கேயே-இப்போதே அதுபற்றிப் பேசுவோம் என்று கூறினார். இன்றைய ஒழுங்குப பத்திரத்தின் ஆரம்ப வேலைகளை முடித்துவிட்டு இதுபற்றிப் பேசுவோம் என்று சபாநாயகர் கூறினார். இன்று ரம்புக்கன சம்பவம்தான் முக்கியமான பிரச்சினை.அதைவிட வேறெந்த முக்கியமான நிகழ்ச்சி ஒன்றும் இல்லை.இதையே முதலில் பேசுவோம் என்றார் சஜித் கோபத்தோடு. இதனால்,அரச தரப்பில் இருந்து கூச்சல்கள் எழுந்தன.எதிர்தரப்பில் இருந்தும் எழுந்தன.இதனால் சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திப்போட்டார் சபாநாயகர். மீண்டும் சபை தொடங்கியபோது ரம்புக்கன சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணதுங்க விசே கூற்று ஒன்றை ஆற்றினார்.அதில் அவர் கூறிய விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரசன்ன உரையாடிக்கொண்டு இருக்கும்போதே தமக்கு பதில் வழங்க சந்தர்ப்பம் வேண்டும் என்று கூச்சல் போட்டனர். அமைச்சர் பேசி முடித்ததும் அதற்கு எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று சபாநாயகர் கூறினார்.ஆனால்,சஜித் தரப்பினர்.''கோட்டாபய கொலைகாரன்'' என்று கூச்சல் போட த் தொடங்கினர்.  அந்தக் கூச்சலுக்கு மத்தியில் அமைச்சரை தொடர்ந்து பேசுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.அமைச்சரும் அவ்வாறே செய்தார். அவ்வாறு உரையாற்றிக்கொண்டு இருக்கும்போது நளின் பண்டார எம்பி  ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.தொடர்ந்தும் எம்பிக்களால் ஒழுங்குப பிரச்சினைகள் எழுப்பப்பட்டன.அவை எவற்றையும் சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாது பிரசன்னவைத் தொடர்ந்தும் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கினார். இவரது உரையைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா உரையாற்றினார்.அப்போது அரச தரப்பு எம்பிக்கள் அவருக்கு எதிராக கூச்சல் போட்டனர். உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாது நரிகள் இவ்வாறு கூச்சல் போடுகின்றன என்று சஜித் அப்போது கூறினார்.இதற்கெல்லாம் நான் பயப்புடமாட்டேன் என்றும் கூறினார். சஜித் உரையாற்றி முடித்ததும் எழுந்த பிரசன்ன ரணதுங்க நான் இங்கு நேற்று நடந்த சம்பவம் பற்றி பேசினேன்.சஜித்தோ அவரது தந்தையின் காலத்தில் இடம்பெற்றதை பேசிக் சென்றுள்ளார் என்று கூறினார். மேலும்,பிரசன்னா அவரது கையில் இருந்த asia week சஞ்சிகை ஒன்றை உயர்திக் காட்டி அது பற்றி பேச முற்பட்டார்.அப்போது சஜித் தரப்பில் இருந்து கூக்குரல் எழுப்பப்பட்டது. இந்தக் கூச்சல்-குழப்பத்தால் அவர் அமர்ந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் காஞ்சன விஜேசேகர பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர். தொடர்ந்தும் எதிர்க்கட்சி மற்றும் அரச தரப்பில் பல எம்பிக்கள் இது தொடர்பில் உரையாற்றினார்.இதனால் சபை கூச்சல் நிறைந்து காணப்பட்டது.
அபாயா விவகாரம்:ஆளுநர் வசம்:ஒப்படைத்தது கல்வி அமைச்சு
Sun, 06 Feb 2022 08:08:32 +0530
திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அபாயா விவகாரத்தைத் தீர்க்கும் பொறுப்பு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரிவான விசாரணை ஒன்றை நடத்தி உரிய தீர்ப்பை முன்வைக்குமாறு ஆளுநரிடம் கூறப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். அபாயா அணிந்து செல்வது தொடர்பாக நீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கியபோதும் அந்தத் தீர்ப்பை ஏற்காது அப்பாடசாலையின் அதிபர் தான்தோன்றித்தனமாக செயற்பட்டதோடு மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆசிரியைக்கு எதிராகத் தூண்டி ஆர்ப்பாட்டம் செய்ய வைத்தமை குறிப்பிடத்தக்கது.
அடிப்படைவாதம் தலை தூக்க அனுமதிக்கமாட்டேன் 
Fri, 04 Feb 2022 09:21:11 +0530
ஒழிக்கவே முடியாது என்று எல்லோராலும் கூறப்பட்ட புலி பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டிய இந்த நாட்டில் அடிப்படைவாதிகள் தலைதூக்க இடங்கொடுக்கமாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச இன்று கூறினார். இன்று இடமெபெற்ற இலங்கையின் 74ஆவது சுதந்திர நிகழ்வின்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில், மிகவும் கஷ்டமான கால கட்டத்தில்தான் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன்.கடந்த இரண்டு வருடங்கள் மிகவும் சவால்மிக்கதாக இருந்தது.இருந்தாலும் சமாளித்துக்கொண்டு நாட்டை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். இந்த நாட்டை வேறு எந்த சக்திகளுக்கும் அடிபணிய இடங்கொடுக்கமாட்டேன்.இந்த நாட்டை எல்லா சதிகளிலும் இருந்து பாதுகாப்பேன். எனக்கு எதிராக சதி செய்யப்படுகிறது.எனக்கு எதிரான போலிச் செய்திகளை மக்கள் நம்பக்கூடாது.உண்மைத் தன்மையை ஆராய்ந்து பார்த்தே நம்புங்கள். எம்பிக்கள் அனைவரும் நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக நடவுங்கள்.அப்போதுதான் மக்கள் உங்களை அங்கீகரிப்பார்கள். அடிப்படைவாதம் தலைதூக்க இடங்கொடுக்கமாட்டேன்.ஒழிக்கவே முடியாது என்று எல்லோராலும் கூறப்பட்ட புலி பயங்கரவாதத்தை நாம் முற்றாக ஒழித்துக்கட்டினோ.இன்று எல்லோருக்கும் அதனால் பூரண சுதந்திரம் கிடைத்துள்ளது. அதேபோல்,எமக்கு எதிராக வருகின்ற எல்லா சவால்களையும் நாம் முறியடித்து வெற்றிகொள்வோம்.என்றார்.
கொள்ளையடிக்கப்பட்ட மஹிந்தவின் பணம்: செலவழிக்கப்பட்டது இப்படித்தான் 
Sun, 30 Jan 2022 10:35:28 +0530
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தைத் திருடிய அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் அந்தப் பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆடைகள் விற்பனை நிலையம்-அழகு நிலையம்-நட்சத்திர ஹோட்டல்-நட்சத்திர உணவகம் உள்ளிட்ட பல இடங்களில் அந்தப் பணத்தைச் செலவு செய்துள்ளார். ATM அட்டையைப் பயன்படுத்தி அவர் இந்த இடங்களில் பில் கட்டணங்களை செலுத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கி நடத்திய விசாரணையிலேயே இது தெரிய வந்துள்ளது. மஹிந்தவின் கணக்கில் இருந்தது 4 கோடி ரூபாவாகும்.8 லட்சம் ரூபாவே மிஞ்சியுள்ளது.மீதிப் பணத்தை அப்படியே சுருட்டியுள்ளார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டபோது அந்தப் பணத்தைக் தவணை முறையில் திருப்பித் தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.அத்தோடு அவர் சிறு தொகையைச் செலுத்தியுள்ளார் என்றும் தகவல்கள் தெறிக்கின்றன.
புலிகளை உயிர்ப்பிக்க மீண்டும் முயற்சி: இந்திய புலனாய்வு உஷார்  
Thu, 27 Jan 2022 09:45:53 +0530
போலி இந்திய ஆவணங்களை உருவாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் நடைபெறுவதாக இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் லட்சத்தீவுகள் அருகே ஒரு படகை இந்திய கடலோரக் காவல் படையினர் சோதனை செய்தனர். அதில் துப்பாக்கிகள், தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டன .  மேலும் படகில்இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையை சேர்ந்த அவர்கள், பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றனர் எனவும் கூறப்பட்டது. இவர்கள் மீது கடந்த ஆண்டு மே மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சென்னையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உளவுப்பிரிவைச் சேர்ந்த சத்குணம் என்ற சபேசனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.  லட்சத்தீவுகள் ஆயுத கடத்தல் சம்பவத்தில் சபேசனுக்கு மிக முக்கிய தொடர்பிருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் லெட்சுமணன் மேரி பிரான்ஸிக் என்ற பெண்ணும் ஒக்டோபர் முதலாம் திகதி தமிழக பொலிஸாரால்   கைது செய்யப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் தொடர்பான வழக்கையும் என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. லெட்சுமணன் மேரி பிரான்ஸிக்குடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கென்னிஸ்டன் பெர்னாண்டோ, கே.பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், எல்.செல்லமுத்து ஆகியோர் மீது கடந்த ஜனவரி 18 ஆம் திகதி  என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.  இந்த வழக்குகள் தொடர்பாக கருத்து தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர், போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து இந்திய பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை இவர்கள் பெற்றுள்ளனர்.  போலி இந்திய ஆவணங்களை வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கம் செய்யும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆவணங்கள் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மும்பை ஃபோர்ட் கிளையில் பெருந்தொகையான பணத்தை பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.
கணக்கறிக்கை விசாரணையில் இருந்து தப்பிக்க  ரூ.2 கோடி செலவழித்த லிட்ரோ கேஸ் தலைவர் 
Wed, 26 Jan 2022 09:13:52 +0530
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அந்நிறுவனத்தின் கணக்கறிக்கையை பரிசோதனை செய்யும் விடயத்தில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக சட்ட ஆலோசனை நிறுவனம் ஒன்றை நாடியுள்ளார். அதற்காக அவர் ரூ.2 கோடி ஒரு லட்சம் ரூபாவை செலவளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் கணக்கறிக்கையை கணக்காய்வாளர் நிறுவனத்தால் சோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதைத் தடுப்பதற்காக அவர் சட்ட ஆலோசனையை நாடியுள்ளார்.அதற்காகவே அவர் மேற்படி தொகையை செலவளித்துள்ளார். அவர் பதவியில் இருந்த காலப்பகுதியில் சம்பளம் மற்றும் கொடுப்பனவு அடங்கலாக மாதாந்தம் 20 லட்சம் ரூபா பெற்று வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர் ஊழல் புரியவில்லை என்றால் ஏன் இதற்கு அஞ்ச வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
அமைச்சரவை மாற்றம்: இன்று அல்லது நாளை:  அமைச்சர்கள் சிலர் நீக்கம்: பிரதமர் பதவியில் மாற்றமில்லை:
Tue, 04 Jan 2022 08:01:32 +0530
அமைச்சரவை மாற்றம் இன்று அல்லது நாளை இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவையில் தற்போதுள்ள இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் கெபினட் அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் என்றும் தற்போதுள்ள கெபினட் அமைச்சர்கள் பலர் பதவி நீக்கப்படுவர் என்றும் அறிய முடிகிறது.  பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படாது என்று அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கிறது. அரசமைப்பின்படி 30 பேர் மாத்திரமே கெபினட் அமைச்சர்களாக இருக்க முடியும்.இப்போது 29 பேர் கெபினட் அமைச்சர்களாக உள்ளனர்.இன்னும் ஒருவர் மாத்திரமே நியமிக்கப்பட முடியும். தற்போதுள்ள கெபினட் அமைச்சர்கள் பலர் நீக்கப்பட்டு அந்த இடத்துக்கு இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் நிமியக்கப்படவுள்ளனர். அமைச்சின் செயலாளர்களிலும் மாற்றம் செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்: பொது வேட்பாளர் போட்டி:7 பேர் களத்தில்...
Sun, 19 Dec 2021 10:00:16 +0530
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் போட்டி இப்போதே தொடங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸாவே எதிர்க்கட்சியின் வேட்பாளர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.இருந்தும்,அக்கட்சிக்குள் மாத்திரம் மூவர் அதற்கான போட்டியில் இறங்கியுள்ளனர் என்று தெரிய வருகிறது. ஒருவர் சஜித் பிரேமதாசா.அடுத்த இருவரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றிபெற்றர்கள் என்று அறிய முடிகிறது. சிறுபான்மை கட்சி ஒன்றில் வெற்றி பெற்ற ஒருவரும் அவர்களுள் அடங்குகின்றனர் என்றும் தெரிய வருகிறது. மேலும்,அர்ஜூன ரணதுங்க,சந்திரிக்கா அம்மையாரின் ஆதரவு பெற்ற ஒருவர் என மொத்தம் 7 பேர் இந்தப் பட்டியலில் அடங்குகின்றனர்.    
ரணிலை ஜனாதிபதியாக்குவதற்காகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்
Wed, 15 Dec 2021 18:06:37 +0530
மைத்திரி மீண்டும் ஜனாதிபதியாவதைத் தடுத்து ரணிலை ஜனாதிபதியாக்குவதற்காகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது சர்வதேசத்தின் சதி என்றும் அந்தச் சதி தோல்வியடைந்து கோட்டா வெற்றிபெற்றார் என்றும் அவர் மேலும் கூறினார். சிங்கள தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்; ரணிலும் மைத்திரியும் சேர்ந்து ஆட்சி செய்தபோதிலும் ரணிலின் பிழையான நிர்வாகம் காரணமாக ரணிலுடனான உறவை முறித்துக்கொண்டு மஹிந்தவுடன் கைகோர்க்க விரும்பினார்.மஹிந்தவை பிரதமராக்கினார். 52 நாட்கள் மட்டுமே அந்த ஆட்சி இருந்தது.நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றது.மைத்திரி-மஹிந்த கூட்டணி உருவாவதைத் தடுப்பதற்கும் மைத்திரி மீண்டும் ஜனாதிபதியாவதைத் தடுப்பதற்கும் சர்வதேசம் சதி செய்யத் தொடங்கியது. ரணிலை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.அதற்காகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடத்தப்பட்டது.ஆனால்,கோட்டா போட்டியிடுவார் என்று அவர்கள் நினைக்கவில்லை. மைத்திரிதான் போட்டியிடுவார்.உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பலியை மைதிரிமீது போட்டு அவரைத் தோற்கடிக்கலாம்.ரணிலை வெல்ல வைக்கலாம் என்று அந்த சர்வதேச சக்திகள் நினைத்தன. ஆனால்,நடந்தது வேறு.கோட்டா களமிறங்கினார்.மக்கள் எல்லோரும் அவர் பக்கம் திரும்பினார்கள்.சர்வதேசத்தின் சதி தோற்கடிக்கப்பட்டது. இப்படித்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.அவர்கள் எதிர்பார்த்ததுபோல் மைதிரிமீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.இதனால்,அதிகம் பாதிக்கப்பட்டது மைத்திரிதான்.என்றார்.
வடக்கு-கிழக்கு இணைப்பை ஆதரிக்கிறதா முஸ்லிம் காங்கிரஸ்?
Tue, 14 Dec 2021 09:27:26 +0530
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் ஒன்றுகூடலில் 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றொரு கோரிக்கை கூட்டாக முன்வைக்கப்பட்டது. 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வடக்கு-கிழக்கு இணைந்தே இருக்கும்.அப்படியாயின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு-கிழக்கு இணைப்பை ஆதரிக்கிறதா என்று முஸ்லிம்கள் கேள்வி எழுப்புகின்றனர். வடக்கு-கிழக்கு இணைந்தால் கிழக்கில் முஸ்லிம்களின் சனத்தொகை வீதம் வீழ்ச்சியடையும் என்பதால் முஸ்லிம்கள் இணைப்பை எதிர்த்து வருகின்றனர். அதேவேளை,வடக்கு-கிழக்கு இணைந்தால் முஸ்லிம்களுக்கு தனி அழகு வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறி வந்தது. இப்போது இது பற்றி எதுவும் கூறாமல் 13ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு முஸ்லிம் காங்கிரஸ் கை உயர்த்தி இருப்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு-இணைப்பை ஆதரிக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
Popular News

© 2022 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us