வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் 20 ஆவது திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்பிக்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்பியுமான ரஞ்ஜித் மதுமபண்டார தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்சிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட தேர்தல் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் அக்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.
அந்தக் கட்சிகளே அவர்களின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுமபண்டார கூறினார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்குமா என்று மதுமபண்டாரவிடம் வினவியபோதே இவ்வாறு பதிலளித்தார்.
பௌத்த மக்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்ற அரசு இப்படி இவர்களின் ஆதரவைப் பெற்றமைக்கு வெட்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.