இலங்கையில் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலை காரணமாக இலங்கையர்கள் 6 லட்சம் பேர் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறுவதற்குத் திட்டமிட்டுள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜ்ஜிர அபாயவர்தன தெரிவித்தார்.
இதற்கென வீசாவுக்காக விண்ணப்பித்துள்ளவர்களின் 6 லட்சம் விண்ணப்பங்கள் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களில் தேங்கிக் கிடக்கின்றன என்றும் இவ்வாறு அதிகமானவர்கள் வீசாவுக்காக விண்ணப்பித்திருப்பது இந்த வருடத்தில்தான் என்றும் அவர் மேலும் கூறினார்.
சிறிகொத்தாவில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடும்போதே இந்தத் தகவலை வெளியிட்டார்.
இவ்வாறு நாட்டை விட்டுப் போவதற்குத் திட்டமிட்டுள்ளவர்களுள் தொழில் அதிபர்கள்,கல்விமான்கள் என நாட்டின் முக்கிய சொத்துக்கள் அடங்குகின்றன.இவர்கள் இப்படிச் சென்றால் நாடு எதிர்காலத்தில் எல்லாத் துறையிலும் பின்னடைவைச் சந்திக்கும் என்று அவர் எச்சரித்தார்.
இவர்களுள் அதிகமானவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்றும் அமேரிக்கா,கனடா,அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கே இவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் வஜிர கூறினார்.
இந்த அரசின் பிழையான பொருளாதார கொள்கையால் நாட்டின் எதிர்கால பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சியே தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக இவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என்று அவர் அங்கு சொன்னார்.