இளம் உற்பத்தியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக கண்காட்சி ஒன்றை அமைச்சர்கள் நாமல் ராஜபக்ஸ மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் அண்மையில் கொழும்பில் திறந்து வைத்தனர்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வர்த்தக கூடாரங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.அங்கு ஒரு கூடாரத்தில் 2 பெண்கள் அப்பம் சுட்டுக்கொண்டு இருந்தார்கள்.அவர்களிடம் சென்று அமைச்சர்கள் இருவரும் பேச்சுக் கொடுத்தனர்.
அவர்கள் நாமலின் மனைவியின் ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.நான் நாளை மனைவியுடன் ஊருக்கு வரவவுள்ளேன் என்று நாமல் கூறினார்.
அப்போது அந்த பெண்கள் இருவரையும் அப்பம் தின்னுமாறு கூறினர்.
நாமலுக்கு ஒரே தயக்கம்.ஏன் தெரியுமா?ஏற்கனவே மைத்திரி மஹிந்தவுடன் சேர்ந்து அப்பம் உண்டுவிட்டு பல்டி அடித்த கதை ஒன்று உண்டல்லவா.அது ஞாபகத்துக்கு வந்ததும்தான் அவர் அப்பம் தின்ன தயங்கினார்.
'' அப்பம் என்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்ணவும் முடியாத மறுக்கவும் முடியாத உணவு'' என்றார் பந்துல அந்த பெண்களை பார்த்து.-அந்த வரலாற்றை நினைவூட்டி..
''அப்படியென்றால் ஒன்றாகவே உண்போம்.அரசை விட்டு வெளியேறுவதென்றால் ஒன்றாகவே வெளியேறுவோம்''-என்றார் நாமல் அப்போது.
''நல்லது.நான் வெளியேறுவதென்றால் நாட்டை மீட்டெடுத்த வீரனின் மகனோடுதான் வெளியேறுவேன்'' என்று கூறிவிட்டு அப்பத்தை உண்ணத் தொடங்கினார் பந்துல.
பிறகு நாமலும் சரியென்று கூறிக்கொண்டு உண்ணத் தொடங்கினார்.