Home / Crime Story / Post:607

மூன்று உயிர்களை பறித்த வட்டி

Thu, 19 Dec 2019 06:13:53 +0530 | News Desk
மூன்று உயிர்களை  பறித்த வட்டி

தென்காசி மாவட்டம் புளியரை அருகில் உள்ள கட்டளைக் கிராம குடியிருப்பு அது.

விடிந்தும் வெகுநேரமாகத் திறக்கப்படவில்லை ஆட்டோ சாரதி கந்தசாமியின் வீடு.

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த அயலவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.மரணித்த நிலையில் மூன்று உயிர்கள்.

தூக்கில் தொங்குகிறார் கந்தசாமி.ஏனைய இரண்டு உயிர்கள் தரையில் பிணமாய்க் கிடக்க இரண்டு வயதுக் குழந்தை மட்டும் அழுத நிலையில்.

பதறிப் போன அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறார்கள் பொலிஸார்.

கணவன் கந்தசாமி,மனைவி இந்துமதி,ஆறு வயதுக் குழந்தை மூவரும் உயிர் பிரிந்த நிலையில்.

வறுமையே எங்கள் மரணத்துக்குக் காரணம் என்ற வாக்குமூலம் மட்டும் சுவரில்...

இந்த விபரீத முடிவுக்குக் காரணம் இதுதான்.

கந்தசாமியின் 6 வயது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவன்.அவனைக் குணப்படுத்துவதற்காக ஏறாத மருத்துவமனைகள் இல்லை.

லட்சக்கணக்கில் பணம் செலவானதைத் தவிர கிடைத்த பலன் ஒன்றுமில்லை.

செலவு வருமானத்தைத் தாண்ட ஆட்டோவுக்கான தவனைத் தொகையைக் கட்ட முடியவில்லை கந்தசாமியால்.

ஆட்டோவைத் தூக்கிடுச்சி பைனான்ஸ் கம்பெனி.இதனால் கிடைத்த சொற்ப வருமானமும் அவுட்.

இதைச் சமாளிப்பதற்காக பல இடங்களில் கடன் வாங்கினார் இந்துமதி.

அது வட்டிமேல் வட்டி என்று குட்டிபோட அதிலிருந்து தப்புவதற்கு மரணத்தைத் தவிர வேறு வழி இருக்கவில்லை அவர்களுக்கு.

முன்பு கந்து வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் இப்போது மைக்ரோ பைனான்ஸ் கம்பெனி வைத்து நடத்துகிறார்கள்.

இவர்கள் கிராமப்புறங்களில் இயங்கும் சுய உதவிக்குழுக்கள் தலைவிகளை கமிஷன் கொடுத்து கைக்குள் போட்டுக்கொள்கிறார்கள்.

இந்தக் கம்பெனிகள் மறைந்துகொண்டு இவ்வாறான சுய உதவிக்குழுக்களின் ஊடாகவே வட்டித் தொழிலை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றன.

வறுமையால் வாடும் மக்கள் அவர்களின் வறுமையைப் போக்குவதற்காக இந்த சுய உதவிக் குழுக்களிடம் கைநீட்ட இறுதியில் கழுத்தை நெருங்குகிறது வட்டி.

வட்டியின் தொகை தெரியாமலேயே கடன் வாங்குகின்றனர்.பின்பு அந்த வட்டிக்காரர்கள் சொல்வதுதான் கணக்கு.

வட்டியை முறையாகச் செலுத்தாவிட்டால் விடியும் முன்பே வீட்டுக்கு வந்துவிடுவார்கள் வசூலுக்காக.

அச்சத்தாலும் அவமானத்தாலும் அன்றைய உணவுக்காக வைத்திருந்த பணத்தைக்கூடக் கொடுத்து சமாளிக்கிறார்கள் அந்த மக்கள்.

வட்டிக்காரர்கள் குறி வைப்பது ஏழைகளைத்தான்.

இப்படித்தான் சிக்கினார் கந்தசாமியும்.

மனைவி ஒருபுறம்,கணவன் மறுபுறம் என  கடன்களை வாங்கிக் குவிக்க கழுத்தை வந்து பிடித்துவிட்டனர் வட்டிக்காரர்கள்.

வருமானம் எதுவுமில்லை.செலுத்த வழியில்லை.இதில் இருந்து தப்பிக்க மரணத்தைத் தவிர வழியில்லை.

இப்படி எத்தனையோ குடும்பங்கள் அழிகின்றன இந்த வட்டியால்.

 

மூன்று உயிர்களை  பறித்த வட்டி மூன்று உயிர்களை  பறித்த வட்டி

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us