Local News
அதிகரித்துச் செல்லும் எலிக் காய்ச்சல்:  1351 பேர் இதுவரை பாதிப்பு 
Tue, 28 Apr 2020 08:24:34 +0530
ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 24 ஆம் திகதிவரை 1351 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தொற்று நோய் வைத்தியப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் 24 வரை 45 பேரும் மார்ச் மாதத்தில் 188 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பெப்ரவரி மாதம் 453 பேரும் ஜனவரி மாதம் 665 பேரும் இந்த எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 273 ஆகும். காலி மாவட்டத்தில் 159 பேரும் கழுத்துறையில் 113 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
Local News
15 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவன்
Tue, 28 Apr 2020 05:07:51 +0530
15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 16 வயது மாணவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான். சிறுமியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு அமுலில் இருந்தபோது காலி ரத்தகம விளையாட்டு மைதானத்துக்கு பின்னால் உள்ள சன நடமாட்டம் இல்லாத இடத்துக்கு இந்தச் சிறுமியை அழைத்துச் சென்று சிறுவன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளான் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். சந்தேகநபர் நீதிமன்றின் முன் ஆஜர் செய்யப்படவுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
World News
சவூதியில் 18 வயத்துக்குட்பட்டோருக்கு மரண தண்டனை இல்லை
Mon, 27 Apr 2020 06:20:26 +0530
18 வயதுக்கு கீழ்ப்பட்டோர் செய்து வந்த குற்றச்செயல்களுக்காக வழங்கப்பட்டு வந்த மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு சவூதி இளவரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.மாறாக,அபராதம்,சிறை மற்றும் சமூக சேவை போன்றவையே தண்டனைகளாக வழங்கப்படும்.  18 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கு மரண தண்டனை வழங்கப்படுவது விமர்சிக்கப்பட்டு வந்தது.இதனைத் தொடர்ந்தே இந்தத் தண்டனையை அவர் நீக்கியுள்ளார். சவூதியை பழமைவாதத்தில் இருந்து விடுவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை இளவரசர் மேற்கொண்டு வருகிறார்.பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை,பெண்கள் விளையாட்டுப் போட்டிகளை பார்க்கும் உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை பெண்களுக்கு வழங்கியுள்ளார்.
Local News
கொரோனாவால் குழந்தைகளுக்கு புதிய ஆபத்து 
Mon, 27 Apr 2020 05:30:48 +0530
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக போலியோ,தட்டம்மை மற்றும் டிப்தீரியா போன்ற நோய்களுக்கு எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றுவதை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த நோய்களால் பல மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படும் பேராபத்து ஏற்பட்டுள்ளது என்று யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகமான நாடுகள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளன.25 நாடுகள் தட்டம்மைக்கு மருந்து வழங்கும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. கொரோனாவுக்கு முன்பே ஒரு வயதுக்கு உட்பட்ட 2 கோடி குழந்தைகள் போலியோ,தட்டம்மை போன்ற நோய்களுக்கு தடுப்பு மருந்தினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்னும் அதிகமான குழந்தைகள் இந்த மருந்தை இழப்பார்கள்.இதனால் போலியோ,தட்டம்மை போன்ற நோய்கள் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.இதனால் பல மில்லியன் கணக்கான குழந்தைகளின் வாழ்வு சிக்கலாகிவிடும் என்று யுனிசெப் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
Local News
ஹுலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை 
Sun, 26 Apr 2020 13:09:37 +0530
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துத் தெரிவித்தார் என்று குற்றஞ்சாட்டப்படும் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூலுக்கு எதிராக புதிய நாடாளுமன்றில் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே தயாசிறி இவ்வாறு கூறினார்.அந்தக் கலந்துரையாடலில் ஹூல் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்களுக்கு ஏற்பதான் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஹூல் கூறுவதை ஏற்க முடியாது என்றும் தயாசிறி அங்கு கூறினார். அந்தக் கூட்டத்தில் ஆணைக்குழுவின் சார்பில் கலந்துகொண்ட ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவோ அல்லது ஆணைக்குழுவின் உறுப்பினர் நளின் அபேசேகரவோ தயாசிரியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்கள் என்று தெரிய வருகிறது.    
Local News
நாடாளுமன்றத் தேர்தல் 2 கட்டங்களாக???
Sun, 26 Apr 2020 12:26:33 +0530
ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளபோதிலும்,தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்று ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார். மே மாதம் 4 ஆம் திகதி வேட்பாளர்களுக்கு இலக்கங்கள் வழங்குவதற்கும் தபால் வாக்கு விண்ணப்பங்கள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர் மே மாதம் மூன்றாம் திகதி நிலைமையைப் பார்த்தே வாக்கெடுப்பு முறையைத் தெரிவு செய்வோம் என்றார். இந்தத் தேர்தலை நடத்துவதற்கு 700 கோடி ரூபா தேவைப்படும் என்று ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளபோதிலும்,தற்போதைய நிலையையின்கீழ் சுகாதார அமைச்சு வழங்குகின்ற ஆலோசனைகளை  பின்பற்றித் தேர்தலை நடத்துவதாக இருந்தால் மேலும் செலவு அதிகரிக்கும் என்று சமன் சிறி ரத்நாயக்க  கூறினார்.  
Local News
200 கோடி டொலர் தேவை 
Sun, 26 Apr 2020 11:47:15 +0530
கொரோனாவால் சிதைவடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அமெரிக்க டொலர் 200 கோடி தேவை என்று ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்காக வெளிநாட்டுக் கடன்களை பெறுதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை அரசு செய்ய வேண்டியுள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கடன்கள் பலவற்றை அடைப்பதற்கு இந்த வருடம் மாத்திரம் 3200 மில்லியன் டொலர் தேவை.இதை அடைப்பதற்கான சலுகைக்காலத்தை நாம் சில நாடுகளிடம் கோரியுளோம். 200 மில்லியன் டொலர் உதவி வழங்கப்படும் என்று உலக வங்கி எமக்கு உறுதியளித்துள்ளது.அதேபோல்,மேலும் பல நாடுகளும் எமக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளன என்று அவர் மேலும் கூறினார்.  
World News
ATM இல் இருந்து கொரோனா: மூன்று இராணுவ வீரர்களுக்குத் தொற்று
Sun, 26 Apr 2020 05:34:21 +0530
ATM இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்த மூன்று இராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இவர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்லவில்லை.இந்த மூவரும் சென்ற பொதுவான இடம் அந்த ATM இயந்திரம்தான்.இதனால் அந்த இயந்திரத்தில் இருந்தே கொரோனா தொற்றியுள்ளது என்று வைத்தியர்கள் கூறுகின்றனர். கொரோனா தொற்றுள்ளவர்கள் யாரோ இதற்கு முன் அந்த இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துள்ளனர்.அவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் ATM இயந்திரத்தில் பரவி இருந்துள்ளது. அந்த நேரம் பார்த்து இந்த இராணுவ வீரர்கள் பணம் எடுக்கச் சென்றுள்ளனர்.அப்போதே இவர்களுக்கு அது தொற்றியுள்ளது. அந்த இராணுவ வீரர்களுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அந்த இயந்திரத்தில் பணம் பெற்றவர்கள் தாமாக முன்வந்து அறிவிக்க வேண்டும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் CCTV காட்சியின் உதவியுடன் அந்த இயந்திரத்தில் இருந்து பணம் பெற்றவர்கள் யாரென்று விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆகவே,ATM இல் பணம் எடுப்பவர்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகும்.பணம் எடுத்த பின் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
World News
அமெரிக்காவின் போர் கப்பல்கள் அழிக்கப்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
Sat, 25 Apr 2020 14:13:18 +0530
ஈரானின் போர்க்கப்பல்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்வகையில் அமெரிக்கா செயற்பட்டால் வளைகுடாவில் நிலைகொண்டுள்ள அந்த நாட்டின் போர்க்கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் அமெரிக்காவின் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டால் அவற்றை அழித்துவிடுங்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க படையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஈரானின் புரட்ச்சிகரப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹுசைன் ஸலாமி கூறினார். ''எங்களது பலம் என்னவென்று அமெரிக்காவுக்குத் தெரியும்.முன்னைய சம்பவத்தில் அவர்கள் நல்ல பாடம் கற்றுள்ளார்கள்.இனிமேலும் எங்களை சீண்டினால்-எங்களது  கப்பல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டால் வளைகுடாவில் நிலைகொண்டுள்ள அந்த நாட்டின் போர்க்கப்பல்கள் அனைத்தையும் அழித்துவிடுவோம்''-என்று அவர் கூறினார்.
Local News
கொரோனா நோயாளிகளுக்கு அம்பியூலன்ஸ் விமானம் 
Sat, 25 Apr 2020 12:31:40 +0530
கொரோனா நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக விமானப் படையினர் விமானம் ஒன்றை அம்பியூலன்ஸாக வடிவமைத்துள்ளனர். தூர இடங்களில் இருந்து மிகவும் அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கப்பட வேண்டிய கொரோனா நோயாளிகளுக்காகவே இந்த விமானம் பயன்படுத்தப்படவுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிக்குத் தேவையான அனைத்து வைத்திய உபகரணங்களும் இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன. விமானப் படைத் தளபதி சுமன டயஸின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அம்புலன்ஸ் வியாழக்கிழமை பறந்து சோதிக்கப்பட்டது என்றும் சோதனை வெற்றி பெற்றுள்ளது என்றும் விமானப் படை தெரிவிக்கிறது.
Local News
மைத்திரியைக் காணோம்
Fri, 24 Apr 2020 06:25:41 +0530
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சில நாட்களாகக் காணவில்லை.காரணம் தெரியவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற முதலாம் ஆண்டு நிறைவின்போது தற்போதைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ,பிரதமர் மஹிந்த ஆகியோர் அறிக்கைகளை வெளியிட்டு அவர்களது சோகங்களை வெளியிட்டனர். முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலும் தாக்குதல் இடம்பெற்றபோது ஜனாதிபதியாக இருந்தவர் என்ற வகையிலும் மைத்திரியிடம் இருந்தும் அனுதாப அறிக்கை எதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,வரவில்லை. இதனைத் தொடர்ந்து பல ஊடகவியலாளர்கள் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொள்வதற்கு முயற்சி செய்தும் பயனற்றுப் போனது. அவர் சில நாட்களுக்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார் என்றும் சில நாட்களின்பின் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிப்பார் என்றும் மைத்திரி வட்டாரம் தெரிவிக்கிறது.
Crime Story
ஒரு பெண்ணுக்காக 9 பேர் கொலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 முஸ்லிம்கள்
Wed, 27 May 2020 06:01:37 +0530
ஒரு பெண்ணுக்காக 9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.அவர்களுள் 7 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.இருவர் அந்தக் குடும்பத்துடன் நெருக்கமானவர்கள். தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கோரே குந்தா என்ற கிராமத்தில் கோணிப்பை தயாரிக்கும் தொழில்சாலை ஒன்று உள்ளது.இதன் ஓனர் சந்தோஷ் என்பவர்.இந்தத் தொழிற்சாலையில் மேற்குவங்கம், பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்துவந்தனர். அவர்களில் ஒருவர்தான் மசூத்.மேற்குவங்கத்தை சேர்ந்தவர்.கரிமாபாத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி வந்தார். இந்த சமயத்தில் லொக்டவுன் போடப்பட்டதால் தொழில்சாலை மூடப்பட்டது.அதனால் குடியிருந்த வீட்டுக்கு வாடகை தர முடியாமல் போய்விட்டது.அதனால் உரிமையாளர் சந்தோஷ் அந்தக் குடும்பத்தை தன்னுடைய குடோனிலேயே தங்க வைத்துக் கொண்டார். இந்தச் சமயத்தில்தான் அந்த குடும்பத்தையே திடீரென காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்தார் சந்தோஷ். பொலிஸாரும் விசாரணையை ஆரம்பித்தனர்.அப்போதுதான், தொழில்சாலைக்குப் பக்கத்திலேயே ஒரு கிணற்றில் சடலங்கள் மிதப்பதாகத் தகவல் வந்தது.தண்ணீரில் மிதந்தபடி 4 சடலங்களை கிடந்தன.மசூத், அவரது மனைவி நிஷா,கணவரைப் பிரிந்து வாழ்ந்த அவரது மகள் புஸ்ரா,அவரது 3 வயது மகன் ஆகியோரின் சடலங்கள்தான் அவை. ஆனால் சடலங்களை மீட்ட மறுநாளே அதாவது கடந்த வெள்ளிக்கிழமை அதே கிணற்றில் மேலும் 5 சடலங்கள் மிதப்பதாகத் தகவல் வரவும் மீண்டும் சென்று மீட்பு பணியைத் தொடங்கினர். அப்போது மசூத் மகன் சபாக், பீகாரை சேர்ந்த தொழிலாளிகள் ஸ்ரீராம், ஷாம், திரிபுராவை சேர்ந்த ஷகீல் அகமது ஆகியோரின் உடல்களை கைப்பற்றினர். இப்படி ஒரே கிணற்றில் அடுத்தடுத்து 9 சடலங்கள் மிதந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து.இவர்கள் எதனால் இறந்தார்கள்? வறுமையால் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலையா என்ற பரபப்பு விசாரணையும் ஆரம்பமானது.  ஆனால் சடலங்களை மீட்ட உடனேயே அது தற்கொலை இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் பொலிஸார்.. காரணம் அந்த பாழுங்கிணற்றில் மூழ்கி சாகும் அளவுக்கு தண்ணீர் இல்லை என்பதால். அதனால் கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பமானது.இவர்கள் சடலமாக மிதந்த முதல்நாள்தான், மசூத்தின் மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது தெரியவந்தது.இந்த பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சஞ்சய் குமார் ஷா என்ற பீகாரை சேர்ந்தவரும் வந்திருக்கிறார்..ஆனால் சடலங்கள் மிதந்த அன்று அவரை அந்த ஊரில் காணோம். எனவே அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.இறுதியில் அவரை கைதும் செய்தனர்.அப்போதுதான் சஞ்சய் குமார் ஷா உட்பட 4 பேர் சேர்ந்து இந்த 9 பேரையும் கொன்றது தெரியவந்தது.காரணம் மசூத் மகள் புஸ்ராதான்..  கணவனை பிரிந்து வாழும் இந்தப் பெண்ணுக்கு வயது 22 ஆகிறது.புஸ்ராவுக்கும் சஞ்சய்க்கும் ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது.ஆனால் மசூத் மகளை கண்டிக்கவும், சஞ்சய்யுடனான தொடர்பை புஸ்ரா கைவிட்டுவிட்டார். இந்தக் கோபத்தினால்தான் மசூத் குடும்பத்தையே மொத்தமாக காலி செய்ய சஞ்சய் துடித்தார்.அதற்காக நண்பர்கள் 4 பேரை தயார் செய்தார்.பக்காவாக பிளான் செய்தார். அந்த சமயத்தில்தான் புஸ்ரா மகனுக்கு பர்த்டே வந்தது.பிறந்த நாள் நிகழ்ச்சியில்,குழந்தைக்கு வாழ்த்து சொல்ல வந்தவர்கள், சர்க்கரை பொங்கல் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.அங்கிருந்த குளிர்பானத்தில் விஷத்தை கலந்து 9 பேருக்கும் கொடுத்தனர். மொத்தக் குடும்பமே அதைக் குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளது.இதன்பிறகுதான் அவர்களை தூக்கி கொண்டு போய் பக்கத்தில் உள்ள பாழுங்கிணற்றில் ராத்திரியோடு ராத்திரியாக தூக்கி போட்டு வந்துள்ளனர். இப்போது 4 பேருமே தற்போது கைதாகி உள்ளனர்.பீகாரை சேர்நத் ராம் குமார்,ஷியாம் குமார் ஆகியோர் மசூத்துடன் நெருக்கமாக இருப்பது சஞ்சய்க்கு பிடிக்காததால்,அவர்களையும் சேர்த்து கொன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே எத்தனையோ இன்னல்களில் பசியும், பட்டினியுமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தவித்து வரும் நிலையில், இப்படி ஒரே குடும்பத்தில் அப்பாவி குடும்பம் கொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Popular News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us