3 பிள்ளைகளின் தாய் வல்லுறவு: குற்றவாளிக்கு 22 வருட கடூழிய சிறை
Thu, 12 Nov 2020 12:25:57 +0530
மாத்தளை ,உக்குவளை பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அவரிடம் இருந்து பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற குற்றவாளி ஒருவருக்கு மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமசந்த நேற்று 22 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.
இந்தக் குற்றவாளியுடன் இணைந்து மேற்படி குற்றத்தை புரிந்த மேலும் இருவர் குற்றத்தை ஒப்புகொண்டதன் காரணமாக அவர்களுக்கு தலா 12 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் பொலிஸ் சீருடையில் கைத்துப்பாக்கி சகிதம் சென்று பொலிஸார்போல் நடித்தே இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளனர்.
தனது மூன்று பிள்ளைகளுடன் இரவில் உறங்கிக்கொண்டிருந்த குறித்த பெண்ணை எழுப்பி வாக்குமூலம் ஒன்று பெற வேண்டும் என்று கூறி வேறு ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றே அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அந்தப் பெண்ணின் நகை மற்றும் பணத்தை திருடிய குற்றத்துக்காக 7வருட சிறைத்தண்டனையும் வழங்கி 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார் நீதிபதி.
அபராதத் தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் அவர் அதற்காக 6 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
பாலியல் வல்லுறவு குற்றத்துக்காக 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.மேலும்,பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளி 3 லட்சம் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.மேலும்,25 ரூபா அபராதமும் விதித்தார்.
அந்த நட்டஈடான 3 லட்சம் ரூபாவை வழங்காவிட்டால் குற்றவாளி அதற்காக 2 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
அதேபோல்,25 ஆயிரம் ரூபா அபராத தொகையை செலுத்தாவிட்டால் அதற்காக 6 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
மாத்தளை களுதாவள பகுதியை வசிப்பிடமாகக்கொண்ட நபருக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.
மொத்தமாக அவருக்கு வல்லுறவு மற்றும் திருட்டுக் குற்றத்துக்காக 22 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மாத்தளை ,உக்குவளை உக்குவள வத்தை பகுதியை சேர்ந்த பெண்ணை மேற்படி குற்றவாளி மேலும் 2 நபர்களுடன் சேர்ந்து 2005 ஜூன் ,4 ஆம் திகதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி பணம்,நகைகளை கொள்ளையடித்தார்.
ஏனைய இரண்டு குற்றவாளிகளும் ஆரம்பத்திலேயே குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணத்தால் அவர்களுக்கு தலா 12 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இந்தக் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்தே நேற்று 11 ஆம் திகதி இவர்களுக்கு மேற்படித் தீர்ப்பு வழங்கப்பட்டது.