Local News
13 மற்றும் 15 ஆம் திகதிகளில் எம்பிக்களுக்கு PCR பரிசோதனை
Tue, 12 Jan 2021 09:31:05 +0530
அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர,வாசுதேவ நாணயக்கார மற்றும் ரவூப் ஹக்கீம் எம்பி ஆகியோர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நாடாளுமன்ற எம்பிக்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்கள் ஆகியோர்க்கு PCR பரிசோதனை செய்யப்படவுள்ளது. 13 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் இந்த சோதனை மேற்கொள்ளப்படும் என்று நாடாளுமன்ற படைக்கல சேவிதர்  நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தங்களை  PCR பரிசோதனைக்கு உட்படுத்த விரும்பும் எம்பிக்கள் இந்த தினங்களில் நாடாளுமன்றத்துக்கு வரமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். 
Local News
உயிர் தப்புவதற்காக சிறை செல்லும் பாதாள குழுத் தலைவர்கள் 
Wed, 06 Jan 2021 10:13:26 +0530
அதிகமான பாதாள குழுக்களின் செயற்பாடுகளும் போதைப் பொருள் வர்த்தகமும் சிறையில் இருந்துதான் முன்னெடுக்கப்படுகின்றன என்று எஸ்.பி.திஸாநாயக்க எம்பி நேற்று கூறினார்.  பாதாள குழுத் தலைவர்கள்  உயிர் தப்புவதற்காகவே சிறை செல்கிறார்கள் என்று கூறிய அவர் அங்கிருந்துகொண்டு உயிரையும் பாதுகாத்துக்கொண்டு குற்றச் செயல்களையும் முன்னெடுத்து வந்தனர்.இப்போது அந்த நிலை மாறிவிட்டது என்றார். எமது ஜனாதிபதி போதை பொருள் வர்த்தகத்தையும் பாதாள குழுக்களையும் முற்றாக ஒழித்து வருகிறார் என்று அவர் மேலும் கூறினார்.
Local News
தேவை ஏற்பட்டால் பார்ப்போம்    
Wed, 06 Jan 2021 09:43:26 +0530
எம்பியாகும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஸ எதிர்காலத்தில் அதற்கான தேவை ஏற்பட்டால் பார்ப்போம் என்று கூறியுள்ளார். இது தொடர்பில் அவரிடம் மீண்டும் ஒரு தடவை கேள்வி எழுப்பியபோதே இவ்வாறு கூறினார்.இப்படியே இருந்தவாறு மக்களுக்கு சேவை செய்வது தனக்குப் பிடித்துள்ளது என்றும் அவர் கூறினார். சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைபற்றி அவரிடம் கேட்டபோது அப்படி எதுவுமில்லை என்று பதிலளித்தார். சு.கவை தாம் ஒருபோதும் ஒதுக்கவில்லை என்றும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தவில்லை என்றும் பசில் கூறினார். 
Local News
கொரோனா பரிசோதனையில் குழப்பம்:  உறவினரிடம் ஒப்படைக்கப்பட்ட சடலம்: பின்பு நடந்ததைப் பாருங்கள்
Wed, 06 Jan 2021 06:16:40 +0530
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில்,மரணித்த ஒருவரின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று குருநாகலில் இடம்பெற்றது. கொரோனா பரிசோதனையில் ஏற்பட்ட குழப்பமே இதற்குக் காரணம் எனத் தெரியவருகிறது.இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது; இதய நோய் காரணமாக குருநாகல் பண்ணல பகுதியைச் சேர்ந்த 76 முதியவர் ஒருவர் 2 ஆம் திகதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.அவர் நேற்று 5 ஆம் திகதி மரணித்தார். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது அவருக்கு PCR  மற்றும் அன்டிஜென் ரெபிட் சோதனைகள் செய்யப்பட்டன. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அன்டிஜென் அறிக்கை கூறியது.இந்த நிலையில்,அவர் நேற்று மரணித்தார்.இதனால்,நேற்றே அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் ஒப்படைக்கப்பட்ட பின்புதான் PCR அறிக்கை வந்தது.அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.இதனால்,அவரது வீட்டுக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் சடலத்தை தகனம் செய்ததோடு அந்த மரண வீட்டுக்குச் சென்றிருந்த 180 பேரை தனிமைப்படுத்தினர்..  கொரோனா இல்லை என்று அன்டிஜென் கூறுகிறது. ஆனால்,கொரோனா உள்ளது என்று PCR கூறுகிறது. 
Local News
ஜனாஸா நல்லடக்கம்:கிறிஸ்தவ அமைப்புகளுக்கு மௌலானா பாராட்டு 
Tue, 05 Jan 2021 10:58:20 +0530
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு கிறிஸ்தவ அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளமைக்காக முன்னாள் எம்பி அலி சாஹிர் மௌலானா பாராட்டுக்களைத் தெரிவிட்டுள்ளார். இவர்களின் இந்த ஆதரவு ஜனாஸா  தொடர்பான எமது ஜனநாயகரீதியான போராட்டத்துக்கு வலு சேர்க்கின்றது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.  தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு மற்றும் சமூக மற்றும் சமயத்துக்கான மத்திய நிலையம் ஆகிய அமைப்புகள்  கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்காகவே மௌலானா இந்த அமைப்புகளுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார். 
Gossips
அப்பம் உண்பற்குத் தயங்கிய நாமல்! ஏன் தெரியுமா?
Sat, 26 Dec 2020 08:53:52 +0530
இளம் உற்பத்தியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக கண்காட்சி  ஒன்றை அமைச்சர்கள் நாமல் ராஜபக்ஸ மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் அண்மையில் கொழும்பில் திறந்து வைத்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வர்த்தக கூடாரங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.அங்கு ஒரு கூடாரத்தில் 2 பெண்கள் அப்பம் சுட்டுக்கொண்டு இருந்தார்கள்.அவர்களிடம் சென்று அமைச்சர்கள் இருவரும் பேச்சுக் கொடுத்தனர். அவர்கள் நாமலின் மனைவியின் ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.நான் நாளை மனைவியுடன் ஊருக்கு வரவவுள்ளேன் என்று நாமல் கூறினார். அப்போது அந்த பெண்கள் இருவரையும் அப்பம் தின்னுமாறு கூறினர். நாமலுக்கு ஒரே தயக்கம்.ஏன் தெரியுமா?ஏற்கனவே மைத்திரி மஹிந்தவுடன் சேர்ந்து அப்பம் உண்டுவிட்டு பல்டி அடித்த கதை ஒன்று உண்டல்லவா.அது ஞாபகத்துக்கு வந்ததும்தான் அவர் அப்பம் தின்ன தயங்கினார். '' அப்பம் என்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்ணவும் முடியாத மறுக்கவும் முடியாத உணவு'' என்றார் பந்துல அந்த பெண்களை பார்த்து.-அந்த வரலாற்றை நினைவூட்டி.. ''அப்படியென்றால் ஒன்றாகவே உண்போம்.அரசை விட்டு வெளியேறுவதென்றால் ஒன்றாகவே வெளியேறுவோம்''-என்றார் நாமல் அப்போது. ''நல்லது.நான் வெளியேறுவதென்றால் நாட்டை மீட்டெடுத்த வீரனின் மகனோடுதான் வெளியேறுவேன்'' என்று கூறிவிட்டு அப்பத்தை உண்ணத் தொடங்கினார் பந்துல. பிறகு நாமலும் சரியென்று கூறிக்கொண்டு உண்ணத் தொடங்கினார். 
Local News
Facebook காதலால் 15 வயது மாணவி கர்ப்பம் 
Fri, 25 Dec 2020 10:37:19 +0530
Facebook காதலால் 15 வயது மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சம்பவம் ஒன்று மஹரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை விடுமுறை காரணமாக ஒன்லைன்மூலம் கல்வி பயில்வதற்காக குறித்த மாணவியின் தந்தை 4 மாதங்களுக்கு முன் மாணவிக்கு கையடக்கத் தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். ஒன்லைனில் படிக்கும் அதே நேரம் Facebook கணக்கொன்றை திறந்து நண்பர்களுடன் அரட்டையடித்து வந்துள்ளார்.அப்படியே ஒரு இளைஞனுடன் காதலும் ஏற்பட்டுள்ளது அந்த மனைவிக்கு. ஓகஸ்ட் முதலாம் திகதி தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி அந்த காதலனை சந்திக்க காதலனோ மாணவியை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று 3 நாட்கள் தங்கியுள்ளான். அப்போது அந்த மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கும் உட்படுத்தியுள்ளான்.இந்த நிலையில்,மகளை காணவில்லை என்று பெற்றோர் பொலிஸில் முறைப்பாடும் செய்தனர். மூன்று நாட்கள் கழித்து அவன் மாணவியை அழைத்துக்கொண்டு மாணவியின் வீட்டுக்குச் சென்றதும் மாணவியின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால்,அவன் மீண்டும் மாணவியை அழைத்துக்கொண்டு சென்று ஒரு வீட்டில் தங்கினான்.இதனால்.மாணவி கர்ப்பமடைந்தாள். காதலன் அவளைக் கொடுமைப்படுத்தியதும் மாணவி பெற்றோரிடம் வந்து விடயத்தைக் கூறினாள்.மாணவியை அழைத்துச் சென்று பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததும் அவன் கைது செய்யப்பட்டு நுகேகொட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டான்.அவனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.  
Local News
சுயதனிமைப்படுத்தலில் பூனை! பிலியந்தலையில் சம்பவம் 
Fri, 25 Dec 2020 09:48:18 +0530
தன்னை வளர்த்து வந்த வீட்டார் கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதால் அந்த வீட்டின் பூனை ஒன்று மூன்று நாட்களாக உணவு,தண்ணீர் இன்றி வீட்டுக்குள்ளேயே சுய தனிமைப்படுத்தலில் இருந்த சம்பவம் ஒன்று பிலியந்தளவில் இடம்பெற்றுள்ளது. இதை அறிந்த பொலிஸாரும் பொது சுகாதார அதிகாரிகளும் நேற்று முந்தினம் பூனையை வெளியே எடுத்து அதற்க்கு உணவு கொடுத்துள்ளதோடு வேறு பூனை ஒன்றுடன் அதை இணைத்துவிட்டனர். அந்த வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.இதனால் அந்தப் பூனை மூன்று நாட்களாக உணவின்றி வாடியது. அந்த வீட்டார் தமது பூனை இவ்வாறு வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்குகின்றமை தொடர்பில் அந்த வீட்டார் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தொலைபேசி மூலம் அறிவித்தனர். பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸாருக்கு அறிவித்து அவர்களும் பொலிஸாரும் இணைந்து சென்று பூனைக்கு உணவு கொடுத்துள்ளனர். வீட்டார் சுகமடைந்து வீட்டுக்கு வரும்வரை இந்த பூனையை பராமரிக்குமாறு அவர்கள் அயலவர்களிடம் கூறிச் சென்றனர்.
Local News
குழந்தைங்களின் பசியைப் போக்குவதற்காகத் திருடிய தந்தை
Fri, 25 Dec 2020 09:16:34 +0530
பட்டினியால் வாடும் தனது பிள்ளைகளின் பசியைத் தீர்ப்பதற்காகதந்தை ஒருவர் பணம் திருடிய சம்பவம் ஒன்று கம்பொலவில் இடம்பெற்றுள்ளது. கூலித் தொழிலாளியான அந்த நபர் கீழே வீழ்ந்து கால் முறிந்துள்ளதால் அந்தக் காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால் அவர் தொழிலை இழந்து வீட்டில் உள்ளார். வருமானம் எதுவுமில்லை.வீட்டில் வறுமை.அவரது 2 பிள்ளைகளும் பட்டினியில்.அவர்களின் பசியை போக்குவதற்காக கடை ஒன்றில் திருடியுள்ளார்.இறுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலிஸாரின் விசாரணையின்போது தான் இவ்வாறு திருடியமைக்கான காரணத்தைக் கூறியுள்ளார்.
Local News
ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதியுங்கள் 
Wed, 23 Dec 2020 06:45:22 +0530
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்கிவிடுங்கள் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; இந்த நாட்டு பிரஜைகள் அனைவரும் அவர்களது சமய அடிப்படையில் இறுதி கிரியைகளை மேற்கொள்வதற்கு உரிமை உண்டு.அந்த உரிமைகள் மறுக்கப்படக்கூடாது. இன்று கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கும் செய்யும் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றமை கவலை தருகின்றது. அந்த உடல்களை மாலைதீவில் அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படும் செய்தி வேதனைக்குரியது.இந்த நாட்டு மக்களின் உடல்கள் இந்த நாட்டில்தான் அடக்கப்பட வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.முஸ்லிம்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும்.என்றார்.
Gossips
முட்டி மோதிய அமைச்சர்கள் வாசுதேவ-பவித்ரா 
Sun, 20 Dec 2020 18:43:38 +0530
அமைச்சர்கள் பவித்ராவும் வாசுதேவவும் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள்.கடந்தவாரம் ஜனாதிபதியின் தலைமையில் வீடியோ மூலமாக இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அவர்கள் இருவரும் முட்டி மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இரத்தினபுரி நகரில் ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் அலுவலகம் ஒன்று உள்ளது.அதை  நீர் விநியோக காரியாலயமாக மாற்றுவதற்கு வாசுதேவ நடவடிக்கை எடுத்தபோது அதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த விடயத்தை அந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குக் கொண்டு சென்றார் வாசு. அந்த இடம் ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமானது என்பதால் அதற்கு மின்சாரம் வழங்க முடியாது என்று மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அப்போது அங்கு கூறினார். அப்போது குறுக்கிட்ட பவித்ரா அந்த இடத்தில் உள்ள காரியாலயத்தை நான் பாவித்தேன் என்று கூறினார். அந்தக் காலப்பகுதியில் அதற்கு மின்சாரம் இருக்கவில்லையா என்று கேட்டார் ஜனாதிபதி. அதற்கு பதிலளிக்காத பவித்ரா,அந்த இடத்தை இரத்தினபுரியின் அபிவிருத்திக்கு கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.அப்படியே செய்வோம் என்றார். இதைக் கேட்ட வாசு ஆத்திரமடைந்து பேயாட்டம் ஆடத் தொடங்கினார்.பவித்ராவும் பதிலுக்கு ஆட்டத்தைத் தொடங்கினார். ஏனைய அமைச்சர்கள் இந்தக் கூத்தை சிரித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தனர். இந்தப் பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தை நிறைவு செய்தார். நிறைவு செய்த பின்பும் இவர்கள் இருவரின் சண்டை முடிவுக்கு வரவில்லை.தொடர்ந்தது.இதை ஏனைய அமைச்சர்கள் வீடியோ ஊடாக பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தனர்.
Local News
கொரோனாவால் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு:25 வீதமான மக்கள் பட்டினியில்! 
Sun, 20 Dec 2020 11:30:40 +0530
கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் மொத்த சனத்தொகையில் 25 வீதமான மக்களுக்கு உணவு கிடைக்காமல் போகும் என்றும் உலக உணவு நிறுவனம் இலங்கை அரசுக்கு தெரிவித்துள்ளது. இலங்கை உணவு பொருட்களை இறக்குமதி செய்வதில் கொரோனா காரணமாக சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இதற்கு ஒரு காரணமாகவும் உள்ளது. இதற்கு மாற்றுத் தீர்வாக உணவு உற்பத்திகளை இலக்கையிலேயே மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. பயிர் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் நிலங்களை உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கும் தூர்ந்து போய்க் கிடக்கும் குளங்களை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசு மேலும் தெரிவித்துள்ளது.
Crime Story
Sun, 24 Jan 2021 01:38:34 +0530
Popular News

© 2021 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us