Home / Gossips
Gossips
அட்டாளைச்சேனை பிரதேச சபை, நகர சபையாக தரமுயர்த்தப்படும் - இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் ஏ.எல். பாயிஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளர் எஸ்.எல்.எம் பழீல் (பி.ஏ) உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   இதன்போது இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உரையாற்றுகையில்,  அட்டாளைச்சேனை பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்தித் தருவதாகவும் திண்மக் கழிவகற்றும் செயற்பாட்டிற்கு தேவையான இயந்திரங்களை வழங்குவதாகவும் தெரிவித்தார். மேலும் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்து தர முடியுமெனவும், இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை நாட்டின் சகல பாகங்களிலும் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.   இந்நிகழ்வில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து பரிசில்கள் வழங்கியதோடு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அத்தோடு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.   மேலும் இதன்போது இராஜாங்க அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ஆகியோரின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 
பொதுமக்களால் காரைதீவு உபபொலிஸ்நிலையம் முற்றுகை! மர்மநபரால் பரபரப்பு:
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
காரைதீவு கடற்கரைவீதியிலுள்ள உப பொலிஸ் நிலையம் நள்ளிரவில் பொதுமக்களின் முற்றுகைக்கு உள்ளானது. இச்சம்பவம் (12) நள்ளிரவு 11.30மணியளவில் இடம்பெற்றது. நள்ளிரவுவேளையில் நடுஊருக்குள் இனந்தெரியாத மர்ம நபரொருவர் பொலிஸ் நிலையத்திற்கு அண்டியுள்ள பிரதேசத்திலுள்ள வீதிமின்விளக்குகளை அணைத்துவிட்டு வீடுவீடாகப் பாயந்துசென்றிருக்கிறார். இதனை தற்செயலாகக்கண்ட ஒருபொதுமகன் கத்திச்சத்தம்போட்டதும் மக்கள் சேர்ந்து அவரைத்துரத்தினர். அவர் ஓடிச்சென்று கடற்கரைவீதியிலுள்ள தற்காலிக உப பொலிஸ் நிலையத்தினுள் புகுந்துள்ளார். மக்கள் நிலையத்தினுள் நுழையமுற்பட்டதும் பொலிசார் விடவில்லை. பொதுமக்கள் பொலிஸ்நிலையத்தைச் சுற்றி முற்றுகையிட்டு நின்றுகொண்டிருந்தனர். விடயமறிந்ததும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் அங்கு விரைந்துசென்று பொலிசாருடன் பேசினார். பொலிசார் குறித்த மர்மநபரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. இதனால் தவிசாளருக்கும் உபபொலிஸ்நிலைய பொலிஸ்பொறுப்பதிகாரிக்குமிடையே வாக்கவாமேற்பட்டது. ஜனாதிபதியென்றாலும் சந்தேகநபரொருவரை பார்க்கஅனுமதிக்கமுடியாது என்று பொலிஸ் அலுவலர் பதிலளித்தார். உடனே தவிசாளர் சம்மாந்துறை பொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரிக்கு தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு அவசரநிலைபற்றிவிளக்கினார். காரைதீவு கடற்கரைவீதியிலுள்ள உப பொலிஸ் நிலையம் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின்கீழ் தற்காலிகமாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தையறிந்ததும் சம்மாந்துறையிலிருந்து பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி இப்னு அசார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்தார். இருவரும் அங்கு மக்களுடன் அரைமணிநேரம் கலந்துரையாடியதன் பலனாக நிலைமை சுமுகமானது. எனினும் தவிசாளரும் மக்களும் இணைந்து குறித்த உபபொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றவேண்டும் என பொலிஸ்பொறுப்பதிகாரியிடம் வேண்டுகோள்விடுத்தனர். குறித்த சந்தேகநபருக்கு அடைக்கலம்கொடுத்துக் காப்பாற்றியமை தொடர்பில் மக்கள் கடுப்பாகினர். இருந்தபோதிலும் குறித்த சந்தேகநபரை நள்ளிரவே விலங்கிட்டு பொலிசார் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். (13)வியாழக்கிழமை  பகல் அவரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ததாக பொலிஸ் பொறுப்பதிகாரி இப்னு அசார் தெரிவித்தார். குறித்த நபர் நற்பிட்டிமுனையைச்சேர்ந்தவரென்றும் அவர் சம்மாந்துறையில் மணம்முடித்தவரென்றும் நள்ளிரவில் நடுஊருக்குள் வந்ததன் மர்மம் என்னவென்று தெரியவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது. (காரைதீவு  நிருபர் சகா)
பெண் வைத்தியர் மர்சூக்கா திடீர் மரணம்!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
ஏறாவூரின் இரண்டாவது பெண்  வைத்தியரான மர்சூக்கா கொழும்பில் இன்று காலமானார் ராகம மருத்துவ பீடத்தில் மருத்துவராக பட்டம் பெற்ற மர்சூக்கா பொறியியலாளரான றிஸ்வின் மனைவியாவார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் கடமையாற்றி இறுதியாக  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றியவர்.. மிகவும் சுகதேகியாக காணப்பட்ட மர்சூக்கா அவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை விசேட வைத்திய பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும்போதே சற்றுமுன் காலமானார். ஜனாசாவினை  ஏறாவூருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுறகிது.  ஜனாசா நல்லடக்கம் பற்றி  பின்னர் அறிவிக்கப்படும்.
கிராமத்திலே கற்று கிராமத்து மாணவன் கணிதத் துறையில் வரலாற்று சாதனை!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற அ.சுதர்சன் என்ற மாணவன் கணிதப்பிரிவில் 2ஏ, சீ சித்திகளையும் 25வது மாவட்ட நிலையையும் பெற்று பொறியியல்துறைக்கு தெரிவாகியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பிரதேசத்தில் அமைந்துள்ள அதிகஸ்ட பிரதேசமான குழுவினமடு கிராமத்தினை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குறித்த மாணவன், அக்கிராமசேவையாளர் பிரிவில் உள்ள அதிகஸ்டப் பாடசாலையான கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரம் வரை கற்று சாதாரணதரத்தில் சிறந்து பெறுபேற்றினையும் பெற்றிருந்தார். குறித்த கிராமத்தில் முதன்முறையாக இம்மாணவனே பொறியியல்துறைக்கு தெரிவாகி வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளதுடன், இப்பிரதேசத்து மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கின்றார். கிராமத்து மாணவர்களும் கல்வியில் முன்னிலை வகிக்க முடியும். என்பதனை நிலைநாட்டுவதையே நோக்காக கொண்டு கற்றதாக கூறும் குறித்த மாணவன், தமது பிரதேச மாணவர்களது கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு இலவச வகுப்புக்களை நடாத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் தமது பிரதேசத்திற்கு உதவி செய்வதிலும் பின்னிற்கப்போவதில்லை என்பதனையும் கூறினார். அன்றாடம் கூலிவேலை செய்து குடும்பத்தினை வழிநடத்தும் குடும்பத்தில் பிறந்த குறித்த மாணவன், கல்விகற்கும் வேளையில், பணவசதி மற்றும் போக்குவரத்து செய்வதிலும் இடர்பாடுகளை எதிர்கொண்டதாகவும் குறிப்பிடுகின்றார். ஆனாபோதிலும் கற்கவேண்டும் என்ற எண்ணத்தின் பயனாகவும், பெற்றோரின் ஒத்துழைப்பும், ஆதரவினாலும், ஆசிரியர்களின் வழிகாட்டலினாலும் தான் எண்ணியதை நிறைவேற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டான்.
மருதமுனை தாறுள்ஹூதா மகளிர் அறபுக் கல்லூரி மாணவிகளின் புதிய சாதனை!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
மருதமுனை தாறுள்ஹூதா மகளிர் அறபுக் கல்லூரியில் 53 மாணவிகள் சித்தியடைந்துள்ளனர்.இவர்களில் 9 மாணவிகள் 3 பாடங்களிலும் “ஏ”சித்தி பெற்றுள்ளதாக கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தெரிவித்தார். முகம்மது ஹாரிஸ் செய்னா,முகம்மட் சாலிஹ் பாத்திமா பஹிமா,முகம்மட் அமீன் பாத்திமா அப்றா,நௌசார் பாத்திமா மிப்லா,ஹாமிட் லெப்பை பாத்திமா ரஸானா, முகம்மது அமானுல்லாஹ் தீஸான்,முகம்மது இஸ்மாயில் பாத்திமா ஜெசீலா,அப்துல்லா ஆயிஷா ஆப்ரின்,முகம்மது ஜஃபர் ஆபிரின் ஸீபா,ஆகிய மாணவிகளே 9 பாடங்களிலும் “ஏ” சித்தி பெற்ற மாணவிகளாவர். இவர்களில் பல மாணவிகள் 2ஏ,1பி சித்தியும்,சில மாணவிகள் 1ஏ.2பி சித்திகளும் பெற்றுள்ளனர் இம்முறை இக்கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 53 மாணவிகளும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தொடர்ச்சியாக பல மாணவிகள் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர்.கடந்த வருடம் 33 மாணவிகள் பல்கலைக்கழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   PMMA. Cader
ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்!: பா.உ நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு.
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது, இன்று சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் ஹமீட், தற்போது அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் மருமகன் எம்.என். பார்ஸான் என்பவரே, தன்னைத் தாக்கியதாக, பொலிஸ் முறைப்பாட்டில் ஹமீட் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை இரவு மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில், ஊடகவியலாளர் ஹமீட் தனது வீடு நோக்கி மோட்டார் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த போது வழிமறித்த பர்ஸான் என்பவர்,  தன்னைத் தாக்கியதாக ஹமீட் தனது முறைப்பாட்டில் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, ஹமீட் மீது தாக்குதல் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அதே பகுதிலுள்ள பவாஸ் எனும் இளைஞர் மீதும், மேற்படி பர்ஸான் என்பவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பில் தாக்குதலுக்குள்ளான இளைஞரும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, சிகிச்சைகளுக்காக அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் பவாஸ் ஆகியோர், தம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ‘புதிது’ செய்தித்தளத்திடம் விவரித்தனர். – முன்ஸிப் அஹமட் –    புதிது
ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை மஷ்ஹூறா தைக்கா பள்ளிவாசல் புனரமைப்பு
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை மஷ்ஹூறா தைக்கா பள்ளிவாசல் புனரமைப்புச் செய்யப்படுகிறது. முன்னாள் பிரதி அமைச்சர் ஹரீஸ் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களை புனரமைப்பு செய்யும்வகையில் பள்ளிவாசல்களின் நிர்வாக சபையினரை அழைத்து பள்ளிவாசல்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டிருந்தார். அந்தவகையில் மஷ்ஹூறா தைக்கா பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கமைவாக குறித்த பள்ளிவாசலின் முன் தோற்றத்தை அழகுபடுத்தும்வகையில் முன்புற மதில் அமைத்தல் மற்றும் முன்பக்க தரைக்கு கல் பதித்தல் ஆகிய வேலைத்திட்டங்கள் தற்போது நடைபெற்றுவருகிறது.
தேசிய மட்டத்தில் சிறப்பு விருதை பெற்றது மட்டக்களப்பு சன்பாே (Sunfo) அணியினர்
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
Srilanka - united nasion  friendship organization அமைப்பின் தேசிய மட்டத்தில் சிறந்த சேவையாளர் பகுதிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு 2018.12.30ம் திகதி B.M.I.C.H இல் இடம்பெற்றது.  இவ் விருது வழங்கும் நிகழ்விற்கு  கிழக்கு மாகாணத்தில் சிறந்த சேவையாளர் அணிகளில் ஒன்றாகவும் மட்டக்களப்பு  மாவட்டத்தின் முதன்மை அணியினராகவும் ஏறாவூர் நகர் SUNFO. அணியினர் தெரிவு செய்யப்பட்டு  Srilanka - united nasion  friendship அமைப்பின்  பணிப்பாளர் நாயகம் Dr. Deshapriya S. Wijetunga South Asian Board Member -GCAP அவர்களால் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். செ ய்தி : அப்துல் பாஸித்
தென்கிழக்குப் பல்கலையில் வரலாற்று நிகழ்வு!!!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை செதுக்கிய சிற்பிகளில் முதன்மையானவர்களில் ஒருவரான அப்பல்கலைக்கழகத்தின் முதல் உபவேந்தர் பெறுமதிமிக்க சமூக ஆர்வலர், பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்களின் பதிப்பில் டாக்டர் எம்.எம்.மீராலெப்பை அவர்கள் எழுதிய ‘சம்மாந்துறை சரித்திரம்’ எனும், இலங்கை முஸ்லிம்களின் குறிப்பாக சம்மாந்துறை மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் துல்லியமாக எடுத்துக்கூறும் நூல் வெளியீட்டு விழா 2018.12.31 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட கலை அரங்கில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் மேன்பாட்டு மையத்தின் தலைவர் கலாநிதி றமீஸ் அபூபக்கரின் வழிகாட்டுதலில் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி, கலாநிதி எம்.எல்.பௌசுல் அமீர் தலைமையில் இடம்பெற்ற குறித்த வராலாற்று நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் கலந்துகொண்டார். ‘சம்மாந்துறை சரித்திரம்’ எனும் நூலின் அறிமுக உரையை மட்டுமல்லாது நூலின் பதிப்பாசிரியரான பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்கள் பல்கலைக்கழகத்துக்கும் சமூகத்துக்கும் ஆற்றியுள்ள பணிகள் பற்றி பேராசிரியர் றமீஸ் அப்துல்லா அவர்கள் அச்சொட்டாக எடுத்துரைத்தார். நூல் பற்றிய நயவுரையை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.ரகுபரன் நிகழ்த்திய அதேவேளை நிறைவுரையை பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் நிகழ்த்தினார். இதில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றியும் அதில் சம்மாந்துறையின் வகிபாகம் பற்றியும் எடுத்துக்கூறியதுடன் தொன்கிழக்குப் பல்கலைக்கழகம் பற்றியும் அதன் தோற்றம் பற்றியும் பிரதேசம் தொடர்பில் அது கைக்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும், மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய பணிகள் தொடர்பிலும், தற்போதைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உயர் கல்வி அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் மறைந்த தலைவரின் கனவுகளில் ஒன்றான தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். நிகழ்வில் ‘சம்மாந்துறை சரித்திரம்’ நூலின் பதிப்பாசிரியர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்களுக்கு பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் பொன்னாடை போர்த்தியதுடன் பிரதம அதிதி உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்களால் நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறையின் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸிலின் நன்றியுரையுடன் நிறைவுற்ற குறித்த நிகழ்வுக்கு அரசியல் பிரமுகர்கள் பேராசிரியர்கள் கலாநிதிகள் கல்வியாளர்கள் சமூக தலைவர்கள் மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர். எம்.வை.அமீர்,யூ.கே.காலித்தீன்-
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக அப்துல் மஜீட் நியமனம்
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக இலங்கை நிர்வாக சேவையில் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் அப்துல் மஜீட் இராஜாங்க அமைச்சர் ஹரீஸினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (1) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.    ஓய்வு பெற்ற நிர்வாக சேவை உத்தியோகத்தரான இவர் தபால், தொலைத்தொடர்பு மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் செயலாளராகவும்  பல்வேறு அரச நிறுவனங்களில் நிர்வாக சேவை உத்தியோகத்தருக்கான பதவி நிலைகளிலும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  
தென்கிழக்குப் பல்கலையில் (2019)அரசாங்க சேவை ஊழியர்களின் சத்தியபிரமாணம்!!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
  பிறந்துள்ள புதிய ஆண்டின்(2019)அரசாங்க சேவை உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை ((2019.01.01) காலை பதிவாளர் அல் ஹாஜ் எச்.அப்துல் சத்தார் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் கலந்துகொண்டு கருத்துரையாற்றினார். இந்நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்,நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்களுக்குமாக 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் புதிய ஆண்டுக்கான உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணமும் இடம்பெற்றது. இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சகல தரப்பு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எம்.வை அமீர்வ
சம்மாந்துறை கல்வி வலையத்தில் ஒரு ஏழை மாணவியிடம் இரக்கமற்று நடந்து கொண்ட பாடசாலை நிர்வாகம்.
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
5250/= செலுத்தி 250/= குறைந்ததால் கதிரை வழங்க மறுக்கப் பட்ட பிஞ்சு ஏழைப் பிள்ளையின் கதையிது.   சம்மாந்துறைக் கல்விக் கோட்டத்தில் ஒரு நகரத்தை அண்டிய பாடசாலை ஒன்றில் நடை பெற்ற உண்மைக் கொள்ளைச் சம்பவம்.        குறித்த அந்தப் பாடசாலையில் புதிய மாணவர்கள் அனுமதியின் போது அதிபரால் பெற்றோர்கள் அழைக்கப் பட்டனர் நிகழ்வுக்குச் சென்றிருந்த பெற்றோர்களிடம் தனது கவர்ச்சியான பேச்சால் பிள்ளைகளுக்குக் கதிரை இல்லை பிள்ளைகளுக்கான கதிரை மேசைக்காக ஒரு தொகையினை நிர்ணயம் செய்துள்ளோம் அந்ததத் தொகையினை செலுத்தி உங்கள் பிள்ளைகளுக்கான கதிரை-மேசையினை பெற்றுக் கொள்ளும் படி குறிப்பிட்டுள்ளார்.    இதனடிப்படையில் ஒரு கதிரை-மேசை செட்டிற்கான மொத்த செலவு 5500/- இத் தொகையினைச் செலுத்தி உங்கள் பிள்ளைகளுக்கான கதிரைச் செட்டுக்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அதிபர் வேண்டியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கான கதிரை-மேசை செட்டுக்கான பணத்தை செலுத்தியிருந்தனர்.     அதில் ஒரே ஒரு மாணவி மட்டும் கடும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவராகையாலும் அந்த மாணவியின் தாய் இடியாப்பம் சுட்டு விற்றல் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் சிறுக சிறுக சேர்த்து 5250 ரூபாய் மாத்திரம் வழங்கியுள்ளார்.   ஒரு கதிரை-மேசை செட்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட மொத்த தொகை 5500 ஆனால் 250 ரூபாய் குறைத்து 5250 ரூபாய் அந்தச் சிறுமியின் பெற்றோர் கொடுத்ததனால் குறித்த அந்தப் பாடசாலை அச் சிறுமியை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.   பாடசாலை அதிபர் கதிரை செட்டுக்காக பெற்றோர்களிடம் தலா 5500/= பணம் பெற்றிருந்தும் 04 மாதங்கள் கடந்தும் தங்களது பிள்ளைக்கு பாடசாலையில் உரிய வசதிகள் கிடைக்கப் பெறாததனை அறிந்த பெற்றோர்ளில் ஒருவர் (எனது நண்பர்) அதிபரை அணுகி கேட்டபோது அதிபர் அது விடையம் எனக்குத் தெரியாது அது சம்பந்தமான குழுவைக் கேட்கவேண்டும் என்று பொறுப்பற்ற விதத்தில் பதில் கூறியிருக்கின்றார்.   இதனால் ஆத்திரமடைந்த குறித்த அந்தப் பெற்றோர் கதிரை செய்யும் இடமானது சம்மாந்துறை விளினையாடி பகுதி என்பதைத் தெரிந்து கொண்டு ஓடாவியாரிடம் விசாரித்த போது 03 மாதங்களுக்கு முதலே நாங்கள் கதிரைகள் செய்து விட்டோம் ஆனால் பாடசாலை நிருவாகம் பணத்தினைத் தயார் செய்யவில்லை என்றும் ஒரு மாணவருக்கான கதிரை-மேசை செட்டின் உண்மையான விலை 4500/= தான் என்றும் அந்த ஓடாவியார் குறிப்பிட்டுள்ளனர்.   இதனை அறிந்த பெற்றோர்கள் பாடசாலை நிர்வாகத்தினரோடு முரண்பட்டதனால் அழுத்தம் காரணமாக ஒரு வழியாக பாடசாலை நிருவாகம் இரவோடு இரவாகக் கதிரைகளை பாடசாலைக்குச் தருவித்துள்ளனர்.   இருந்த போதும் கதிரை-மேசைகளை தருவித்த கையோடு 5500 பணம் செலுத்திய மாணவ-மாணவிகளுக்கு கதிரைகள் பகிர்ந்தளித்துள்ள குறித்த அப் பாடசாலை நிர்வாகம் மேற்படி மாணவியினை 5500 க்கு 250 குறைவதாகச் சொல்லி உனக்குக் கதிரை இல்லை என்று திருப்பியனுப்பியதால் அழுதழுத வீட்டுக் சென்றிருக்கின்றது அந்தச் சிறுமி.   குறித்த இச் சம்பவத்தினை விசாரித்து குறித்த அந்தப் பாடசாலை நிர்வாகம், அதிபர் மீது சட்டநடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...??   தகவல் - முஹமட் முஸ்தபா முஹம்மட் ஹபீப்.
நிந்தவூர்அல்-அகீலா பாலர் பாடசாலை மாணவர்களின் விடுகை விழா
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
நிந்தவூர் அல்-அகீலா பாலர் பாடசாலை மாணவர்களின் விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று 15/12/2019 இடம்பெற்றது. அல்-அகீலா பாலர் பாடசாலையின் தலைவர் ஏ.எல்.அன்சார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பைசால் காசீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார். இதில் முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.றஸீன், முன்னாள் கோட்டக் கல்வி பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.அமீன், எஸ்.எல்.எம்.சலீம், அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை ஒய்வு பெற்ற அதிபர் திருமதி மைமூனா செயினுலாப்தீன், அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை அதிபர் ஏ.எல்.நிசாமுதீன், உயர் அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பிரதேச முக்கியஸ்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது அல்-அகீலா பாலர் பாடசாலை நிர்வாகத்தினால் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பைசால் காசீம் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். M.M. Jabeer CitizenMedia
மருதமுனை TECH-LANG ஆங்கில முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும்.
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
மருதமுனை TECH-LANG ஆங்கில முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் அண்மையில் பாடசாலையின் தலைவர் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக மருதமுனை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. ஏ.ஆர்.எம்.அஸ்மி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மாணவர்களின் பெற்றோர்கள், ஊர் பிரமுகர்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். படங்கள்: TMNEWS.LK (ஏ.எல்.எம்.ஷினாஸ்)  
‘பேத்தாய்’ சூறாவளியினால் கடல் சீற்றம்: அம்பாறை கரையாேர கடற்றொழில் பாதிப்பு
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள ‘பேத்தாய்’ சூறாவளி காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வார காலமாக கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. பொத்துவில் முதல் நீலாவணை வரையான கடற்பரப்பில் பலத்த காற்று வீசிவருகின்றது. இதனால் பாரிய அலைகள் எழுகின்றன. கடல் கொந்தளிப்பின் காரணமாக  சில பிரதேங்களில் கடல் அலை சுமார் 10 அடி வரை மேலுயர்ந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சூறாவளி காரணமாக கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாமென வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்லவில்லை. இம்மாவட்டத்தின் கடல் அலையின் தாக்கத்தினால் கரையொதுங்கிய சில வள்ளங்கள் அலையில் அள்ளுண்டு பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன. கடந்த ஒரு வாரகாலமாக தமது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொத்துவில், கோமாரி, திருக்கோவில், தம்பிலுவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை மற்றும் நீலாவணை ஆகிய பிரதேச மீனவர்கள் தமது படகுகளையும் வள்ளங்களையும் கடற்கரையிலிருந்து நீண்ட தூரத்திற்கப்பால் நிறுத்தி வைத்துள்ளனர். இம்மாவட்டத்தில் சில பிரதேசங்களில் அலையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் கரையோரப்பிரதேசத்தில் இருந்த தென்னை மரங்கள் சில அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஒலுவில் துறைமுகத்தினை அண்டிய பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக அப்பிரதேசத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்களின் இயந்திரப் படகுகள் தொழிலுக்குச் செல்ல முடியாமல் தரித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விடிவெள்ளி
பெரியநீலாவணையில் கோரவிபத்து! முறிவுவைத்தியர் நமசிவாயம் ஸ்தலத்திலே பலி!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
பெரியநீலாவணையில் கோரவிபத்து  முறிவுவைத்தியர் நமசிவாயம் ஸ்தலத்திலே பலி ஏழுவயது இரட்டைச் சகோதரர்கள்  படுகாயம் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் இருந்து கஞ்சா மீட்பு பெரியநீலாவணை பிரதானவீதியில் இன்று பகல் நடைபெற்ற வாகன விபத்தில் பிரபல முறிவு வைத்தியர் ஒருவர் ஸதலத்திலே பலியாகியுள்ளார். அவருடன் பயணித்த இரு இரட்டைச்சகோதரர்கள் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று பகல் பெரியநீலாவணை பிரதான வீதியில் நடைபெற்றுள்ளது. விபத்தில் பெரியநீலாவணையில் எலும்பு முறிவு வைத்தியராக சேவையாற்றும் கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த செல்லத்தம்பி நமசிவாயம்(68வயது) என்பவரே பலியாகியுள்ளார். அவருடன் பயணித்த இரட்டைச்சகோதர்களான வி.தேமீஜன்(7வயது) வி.வேணுஜன்(7வயது) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்முனையில் இருந்து வந்த கனராக வாகனம் சாரதியின் கவனக்குறைவினால் பாதையை விட்டுவிலகி எதிரே வந்த முச்சக்கர வண்டியில் மோதியுள்ளது. கனரக வாகனத்தின் அடியில் முச்சக்கரவாகனம் நசுங்குண்ட நிலையில் சம்பவ இடத்திலே முறிவுவைத்தியர் பலியாகியுள்ளார். இவ்விபத்துச் சம்பவம் பெரியநீலாவணையில் பதட்டத்தை ஏற்படுத்தியது. அவ்விடத்தில் ஒன்று கூடிய மக்கள் ஆவேசப்பட்டவர்களாக காணப்பட்டனர்.  விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கனரகவாகனச் சாரதியை பொதுமக்கள் விரட்டிப்பிடித்தனர். விரைந்து வந்த பொலிஸார் சாரதியை கைது செய்தனர். அவ் விடத்தில் தொடர்ந்தும் பதட்டம் நிலவியது.  இளைஞர்கள் விபத்தை ஏற்படுத்திய கனரகவாகனத்தை முற்றுகையிட்டு சோதனை செய்தபோது வாகனத்தில் இருந்த சிறிதளவு கஞ்சாவை மீட்டுள்ளதுடன். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  இவ் விபத்து தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். பிரபல முறிவு வைத்த்தியர் நமசிவாயத்தின் இழப்பு பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ரஹ்மானுக்கு மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை..!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
  (. கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ரஹ்மானுக்கு மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை..! கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் 2.00 மணி தொடக்கம் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அழைப்புக் கடிதம், மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநகர செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் வழமையான சபை நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான இசட்.ஏ.எச்.ரஹ்மான் அவர்களின் மறைவுக்கான அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளது. இப்பிரேரணையை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் சமர்ப்பிக்கவிருக்கிறார். 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு, வெற்றியீட்டி 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 31ஆம் திகதி, சபை கலைக்கப்படும் வரை உறுப்பினராக பதவி வகித்த இசட்.ஏ.எச்.ரஹ்மான், கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற மாநகர சபைத் தேர்தலிலும் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டதுடன் அதன் பட்டியல் உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எனினும் கடந்த ஒக்டோபர் 01ஆம் திகதியன்று பொலிஸ் துறையில் அவர் மீண்டும் இணைந்து கொண்டதுடன், மாநகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். இவ்வாறு திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்த நிலையில் தனது 53ஆவது வயதில் கடந்த 05ஆம் திகதி அவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. Aslam S Mowlana metromirror கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் 2.00 மணி தொடக்கம் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அழைப்புக் கடிதம், மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநகர செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் வழமையான சபை நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான இசட்.ஏ.எச்.ரஹ்மான் அவர்களின் மறைவுக்கான அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளது. இப்பிரேரணையை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் சமர்ப்பிக்கவிருக்கிறார். 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு, வெற்றியீட்டி 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 31ஆம் திகதி, சபை கலைக்கப்படும் வரை உறுப்பினராக பதவி வகித்த இசட்.ஏ.எச்.ரஹ்மான், கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற மாநகர சபைத் தேர்தலிலும் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்டதுடன் அதன் பட்டியல் உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எனினும் கடந்த ஒக்டோபர் 01ஆம் திகதியன்று பொலிஸ் துறையில் அவர் மீண்டும் இணைந்து கொண்டதுடன், மாநகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். இவ்வாறு திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்த நிலையில் தனது 53ஆவது வயதில் கடந்த 05ஆம் திகதி அவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. metromirroe
Popular News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us