அரசை விட்டு வெளியேறுமாறு 32 எம்பிக்களுக்கு அழுத்தம்: சு.க விலகினால் அரசு அவ்வளவுதான்
Sat, 04 Dec 2021 09:58:24 +0530
அரசை விட்டு வெளியேறுமாறு சு.க உட்பட அரசில் இணைந்துள்ள 32 எம்பிக்களுக்கு அரசுக்குள் சிலர் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
சு.க வெளியேறினால் அந்த 32 பெரு வெளியேறுவார்கள்.அப்போது அரசு 3/2 ஐ மட்டுமல்ல சாதாரண பலத்தைக்கூட இழக்கும்.
-இவ்வாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்;
நாட்டை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி எடுக்கும் முயற்சிக்கு யாரும் உதவுவதாக இல்லை.இதனால்தான் பல இலக்குகளை பூர்த்தி செய்ய முடியவில்லை.
ஜனாதிபதி தேர்தல் முடிந்து நாடாளுமன்றத் தேர்தல் வரும்வரை 14 அமைச்சர்கள்தான் இருந்தார்கள்.அப்போது அவரால் சிறப்பாக செயற்பட முடிந்தது.நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்புதான் எல்லா பிரச்சினைகளும் உருவாகின.
ராஜபக்ஸ சகோதரர்களிடையே எந்தப் பிரிவும் இல்லை.எந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் பிரிந்து செயற்படமாட்டார்கள்.ஆனால்,இங்கே ஏதோ புரியாத பிரச்சினை இருப்பதாகத் தெரிகிறது.அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்.
சிலவேளை,அரசுக்குக் கிடைத்திருக்கும் அதிக பலம் இதற்கு காரணமாக இருக்குமோ என்று சிலவேளை நினைக்கிறேன்.
இதனால்தான் சு.கவை வெளியே போகச் சொல்கிறார்கள்போலும்.விமல்,உதய கம்மன்பில,வாசுதேவ போன்றவர்களையும் வெளியே போகச் சொல்கிறார்கள்.
வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த 32 பேர் அரசில் உள்ளார்கள்.அவர்களையும் வெளியே போகுமாறு கூறுகிறார்கள்.
எங்களால் வெளியே போக முடியாமல் இல்லை.அப்படிப் போனால்,அந்த 32 பேரும் கூடவே வெளியேறுவார்கள்.
நாங்கள் வெளியேறினால் 3/2 பெரும்பான்மை மாத்திரமல்ல சாதாரண பெரும்பான்மையே இல்லாமல் போகும்.
சு.க 14 உறுப்பினர்களுடன் பிரச்சினை என்றால் பேசித் தீர்க்கலாம்.ஆனால்,இங்கே அதற்கான இடம் இல்லை.
அரசைப் பலவீனப்படுத்தும் நோக்கம் எமக்கு இல்லை.அவ்வாறு பலப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிற யாரோதான் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த இந்த வேலையெல்லாம் செய்கிறார்கள் என்று எண்ணத் தோணுகிறது.
கூட்டணிக் கட்சிகள் அனைவரையும் ஜனாதிபதி ஒன்றாக நடத்த வேண்டும்.ஆனால்,இங்கு நடப்பது அதுவல்ல.ஒருவரை நல்ல விதமாகவும் அடுத்தவரை மோசமாகவும் நடத்துகிறார்கள்.
ராஜபக்ஸ சகோதரர்களுக்கு மேலே யாரோதான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று எமக்குத் தோணுகிறது.
மக்களிடம் பேசுவது,மேடைகளில் பேசுவது,தொலைக்காட்சியில் பேசுவது ஒரே குழுதான்.இவர்களை மக்கள் தொலைக்காட்சியில் கண்டதும் அலைவரிசையை மாற்றுகிறார்கள்.
எமக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் இல்லை.நாடாளுமன்றில் பேசுவதற்கும் எமக்குக் கிடைப்பதில்லை.இவர்கள்தான் முன்னறியடித்துக்கொண்டு பேசுகிறார்கள்.நல்லதை பேசினால் பரவாயில்லை.பேசுவது எல்லாம் மோசமான வார்த்தைகள்.என்றார்.