நோன்பு வைத்துக்கொண்டு களவில் தண்ணீர் குடித்திருக்கிறேன்
Thu, 15 Apr 2021 17:25:19 +0530
ரமழான் நோன்பு குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார் இயக்குநர் அமீர்.
10 வயது முதல் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று வருவதாகவும் 25 வயதுக்கு மேல் தான் நோன்பின் மாண்பையும், சிறப்பையும் உணர்ந்ததாகவும் கூறுகிறார்.
''எனக்கு 10 வயது இருக்கும் என நினைக்கிறேன்.அப்போது முதல் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று வருகிறேன்.அப்போதெல்லாம் எதற்காக நோன்பு வைக்கிறோம்.ரமலான் மாதத்தின் சிறப்புகள் என்ன என்பது பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.
அம்மா அதிகாலையில் எழுப்பிவிட்டு சஹர் உணவு கொடுப்பார்கள்.சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவேன். மீண்டும் பகலில் பசியெடுத்தவுடன் பசிக்குது,.பசிக்குது என வீட்டில் கூறுவேன்.''
''அவர்களும் இன்னும் கொஞ்சம் நேரம்தான் இருப்பதாகக் கூறி என்னை சமாளிப்பார்கள்.ஒரு கட்டத்தில் வீட்டிற்கு தெரியாமல் தண்ணீர் கூட குடித்துவிடுவேன்.இதெல்லாம் 10 வயது முதல் 15 வயதிற்குள் நடந்த நிகழ்வுகள்.
அதேபோல் நோன்பு திறக்கும் நேரத்தில் (இஃப்தார்) பள்ளிவாசலுக்கு சென்று முதல் ஆளாக அமர்ந்துகொள்வேன்.''
''இந்நிலையில் எனது தந்தை மறைவுக்கு பிறகு எனது வாழ்க்கை திசைமாறத் தொடங்கியது.கல்லூரிக் காலத்தில் தொழுவது,நோன்பு வைப்பது என எதையும் செய்யாமல் வாலிப வயதிற்கே உரிய தீயச் செயல்கள் பக்கம் திரும்பினேன்.
அது ஒரு காலம்.திடீரென ஞானோதயம் வந்த பிறகு மீண்டும் தொழுகையும்,நோன்பையும் கடைபிடித்ததோடு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை பற்றியும் தெரிந்துகொண்டேன்.''
''நன்மையை ஏவி தீமையை தடுப்பவரே உண்மையான இஸ்லாமியர்.அதைவிடுத்து லுங்கி கட்டிக் கொள்வதாலும்,தாடி வைத்து தொப்பி போட்டுக் கொள்வதாலும் வரும் தோற்றத்தை வைத்து ஒருவரை உண்மையான இஸ்லாமியர் எனக் கூற இயலாது.யார் ஒருவர் பிறருக்கு தீங்கு நினைக்கவில்லையோ அவர் தான் உண்மையான முஸ்லீம்.''
''இதனிடையே 1995-1996 காலகட்டத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுவதற்காக சென்னைக்கு வந்தேன். அப்போதெல்லாம் இப்போது உள்ளதுபோல் அதிகாலை 4 மணிக்கு சஹர் உணவு கிடைக்காது.இதனால் இரண்டு பிஸ்கெட் பாக்கெட் மற்றும் ஒரு டீயை வாங்கி வைத்துக் கொள்வேன்.அது தான் எனது சஹர் உணவு.''
''ரமலான் என்றவுடன் மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்று இது.ரம்ஜான் பண்டிகைக்காக எனக்கு அம்மா மதுரையில் துணி எடுத்துக் கொடுப்பார்.அதில் என்ன வேடிக்கை என்றால், பள்ளி யூனிபார்ஃம் தான் ரம்ஜான் புது டிரெஸ்.
ரம்ஜான் அன்று புது துணி போட்டது மாதிரியும் ஆச்சு, மற்ற நாட்களில் அதை பள்ளிக்கு பயன்படுத்துவது போலவும் ஆச்சு.சட்டையையாவது மாற்றி எடுத்துக் கொடுங்க என்று நான் அம்மாவிடம் சண்டை போட்டிருக்கிறேன்.''
''இன்று கால ஓட்டத்தில் எல்லாம் மாறிவிட்டது.எனக்கு இன்று எவ்வளவு வசதி வாய்ப்புகள் வந்திருந்தாலும் கூட நான் இப்தார் நேரத்தில் (மாலை நோன்பு திறக்கும் நேரத்தில்) நோன்பு கஞ்சியைக்க கொண்டுதான் நோன்பு திறப்பேன். நோன்பு கஞ்சிக்கு ஈடு இணை எதுவுமே இல்லை, அதை பருகும் போது கிடைக்கும் மகிழ்ச்சி தனித்துவமானது.''
'இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி விநியோகம் செய்வார்.நானும் அவர் வீட்டிலிருந்துதான் கடந்த 10 வருடங்களாக நோன்புக் கஞ்சி வாங்கினேன்.இது அவருக்கே தெரியாது என நினைக்கிறேன்.கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டும், இந்தாண்டும் மட்டும் எங்கள் வீட்டிலேயே நோன்புக் கஞ்சி தயாரித்துக் கொள்கிறோம்.''
''இதேபோல் ரமலான் என்றாலே ஸக்காத் (தானம் செய்வது)என்பது இஸ்லாமியர்களுக்கு மற்றொரு முக்கியமான கடமை. நான் ரமலான் மாதம் வரட்டும் எனக் காத்திருக்கமாட்டேன். எனக்கு எப்போது எல்லாம் வருவாய் வருகிறதோ அப்போதெல்லாம் தானம் செய்வதற்கென குறிப்பிட்ட தொகையை எடுத்துவைத்து விட்டுத்தான் மற்ற பணிகளை பார்ப்பேன்''.
-எனக் கூறி ரமலான் மாதம் குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்தார் இயக்குநர் அமீர்.